குண்டர் சட்டத்தின் கீழ் நால்வர் கைது - காட்டாட்சியின் வெளிப்பாடு :சீமான் ஆவேசம்
மே 17 இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதைக்குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய வல்லாதிக்கமும், சிங்களப் பேரினவாதமும் கூட்டுசேர்ந்து தமிழீழ மண்ணில் நிகழ்த்திய கோர இனப்படுகொலையில் உயிரிழந்த 2 இலட்சத்திற்கும் மேலான தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வை அனுசரிக்கும்பொருட்டு மே 21ஆம் தேதி மெரீனாவில் கூடியதற்காக கைதுசெய்யப்பட்டு சிறையிலுள்ள 17 தம்பிமார்களில், நால்வர் மீது குண்டர் சட்டத்தினைப் பாய்ச்சிருப்பது ஏற்கவே முடியாத பாசிசப் பெருங்கொடுமையாகும்.
மக்களின் உரிமைக்காகவும், உணர்வுக்காகவும் போராடுபவர்கள் மீது வழக்குகளைப் பாய்ச்சி அவர்களைச் சிறையிலடைக்கும் அதிமுக அரசின் இத்தொடர் தாக்குதல்களானது அதிகாரத்திமிரும், சர்வாதிகாரப்போக்கும் நிறைந்த காட்டாட்சியின் வெளிப்பாடாகும். சனநாயகத்தின் மீது பற்றுறுதி கொண்டு மக்களாட்சித் தத்துவத்தை ஏற்று வாழும் எவராலும் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாது.
தமிழர்களிடம் போர்க்குணமும், போராட்ட உணர்வும் எழாவண்ணம் மழுங்கடிக்கவே போராட்டங்களுக்கு அனுமதி மறுத்து, போராடுவோரை சிறையிலடைத்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் இப்படுபாதக வேலையினை பாஜகவின் கைப்பாவையாகச் செயல்படும் அதிமுக அரசானது செய்து கொண்டிருக்கிறது.
மத்திய அரசை எவரும் விமர்சிக்க வேண்டாம் என தனது சகாக்களுக்குக் கட்டளையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களின் மீதும் அதனைத் திணிக்கவும், போராடுவோரை அச்சுறுத்தவுமே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது தெளிவாகிறது. சிறையானது எப்போதும் போராட்டக்காரர்களை செதுக்குமே ஒழிய, சிதைக்காது! பண்படுத்துமே ஒழிய, புண்படுத்தாது என்ற வரலாற்று பேருண்மையை ஆட்சியாளர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தருணமிது.
மௌனப்புரட்சியை மனங்களில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் மக்கள் ஒருநாள் இக்கொடுமைகளுக்கு எதிராகவும், அநீதிகளுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுவார்கள். அன்றைக்கு ஊழலிலும், கொள்ளையிலும் சிக்கித்திளைக்கும் இவ்வாட்சியும், அதிகாரமும் வீழ்ந்து ஒழியும் என்பது உறுதி.
இனம் மொத்தமும் ஈழ நிலத்தில் அழித்தொழிக்கப்பட்டு 8 ஆண்டுகளைக் கடந்த பிறகும் அப்படுகொலைக்கான நீதியோ, நியாயமான விசாரணையோ இன்னும் கிடைக்கப்பெறாதநிலையில் இலங்கை மீது ஒரு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை கோரியும், இறந்து போன உறவுகளுக்கு நினைவேந்தலை அனுசரிக்கும்பொருட்டும் இம்மாதம் முழுதும் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறார்கள் புலம்பெயர் தமிழர்கள்.
தமிழர்கள் சொற்பமாக வாழும் நாடுகளில்கூட இந்நிகழ்வுக்கு அந்நாட்டு அரசுகளால் அனுமதி அளிக்கப்பட்டு நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டு வரும்நிலையில், தமிழர் தாயகமான தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பங்கேற்ற இன உணர்வாளர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்படுவது தமிழர் விரோதப்போக்கின் உச்சமாகும்.
ஈழ நிலத்தில் தமிழர்கள் ஒன்றுகூடுவதற்கு தடைவிதித்து அவர்களை இராணுவத்தைக் கொண்டு கண்காணிக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும், தமிழகத்தில் தமிழர்கள் ஒன்றுகூடுதலை அனுமதிக்க மறுக்கும் தமிழக ஆட்சியாளர்களுக்கும் வேறுபாடு ஒன்றுமில்லை என்பது தெளிவாகப் புலப்படுகிறது.
இயற்கை வளங்களைச் சூறையாடுவோரும், மக்களின் சொத்துக்களை அபகரிப்போரும் பகட்டாகத் திரிகையில் இம்மண்ணின் மக்களுக்காக போராடுவோர் மீது குண்டர் சட்டத்தினைப் பாய்ச்ச வேண்டியதென் தேவையென்ன? உரிமையை இழந்து, உடைமையை இழந்து சொந்த நிலத்திலே அடிமையாக நிற்கிற தமிழர்களுக்கு ஓரிடத்திலே ஒன்றுகூடுவதற்குகூட அனுமதி இல்லையா? முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அனுசரித்தால் குண்டர் சட்டம் பாயுமென்றால், இது தமிழர் நாடா? இல்லை! சிங்களர் நாடா? தமிழர்களுக்கு எதிரான இச்சிங்களர் ஆதரவு நடவடிக்கைகளின் மூலம் யாருக்கு விசுவாசத்தைக் காட்ட முனைகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி?
15 ஆண்டுகள் அனுமதிக்கப்படாத ஆர்.எஸ்.எஸ். பேரணியை மெரீனாவில் அனுமதித்த அதிமுக அரசானது, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுமதிக்க மறுக்கிறதென்றால் யாருக்கு ஊழியம் செய்கிறார் எடப்பாடி பழனிச்சாமி? அம்மையார் ஜெயலலிதாவை அடியொற்றி ஆட்சி நடத்துவதாய் நாளும் கூறும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதே அம்மையார் ஜெயலலிதா சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்திற்கு செயலாக்கம் கோரி போராடியோரை கைதுசெய்து சிறைப்படுத்துவது நகைமுரண் இல்லையா?
மெரீனாவில் மக்கள் கூடினால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடுமென்றால் அதே மெரீனாவிலுள்ள ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்தவருகிறவர்களால் சட்டம் ஒழுங்கு கெடாதா? மெரீனாவில் ஒருநாள் கூடும் இன உணர்வாளர்களைக் கைதுசெய்யும் அதிமுக அரசானது, ஜெயலலிதா சமாதியில் தினந்தோறும் கூடி போக்குவரத்துக்கு இடையூறு செய்பவர்களையும், தியானம் செய்பவர்களையும் ஏன் கைது செய்யவில்லை? இன்றும் விலகாத கொடநாடு கொலையினாலும், மர்மங்களினாலும் கெடாத சட்ட ஒழுங்கு பொதுமக்களும், இன உணர்வாளர்களும் அறவழியில் அகவணக்கம் செலுத்தும்போது கெட்டுவிடும் என்பது கேலிக்கூத்து இல்லையா? என இதுதொடர்பாக நமக்கு எழும் கேள்விகளுக்கு விடையேதுமில்லை.
ஒரு சனநாயக நாட்டில் மக்களுக்கு உள்ள அடிப்படை உரிமைகளையே மறுக்கும் இதுபோன்ற சனநாயக விரோத நடவடிக்கைகளை அதிமுக அரசானது இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுதொடருமானால் மிகப்பெரிய எதிர்விளைவுகளை அதிமுக அரசானது எதிர்கொள்ள நேரிடும் எனவும், தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும்பொருட்டு கைதுசெய்யப்பட்டுள்ள 17 தம்பிமார்களையும் எவ்வித வழக்குமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.