வெட்டிப் பேச்சு மூலம் மக்களை ஏமாற்றும் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க ஆட்சிகளில் வரலாறு காணாத வேலைவாய்ப்பு இழப்பு. இளைஞர்களே விழிப்புடன் இருங்கள் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியாதவது:-


 “இந்தியாவில் 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதம் உயர்ந்து விட்டது” என்று தேசிய மாதிரி ஆய்வு (நேஷனல் சேம்பிள் சர்வே) அமைப்பின் 2017-18 ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது என்று வெளிவரும் செய்திகள் மூலம், “வருடத்திற்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன்” என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பொய்யான வாக்குறுதிகளின் முகத்திரை கிழித்து தொங்க விடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தேசிய புள்ளி விவர ஆணையத்தின் தலைவரும், உறுப்பினரும் “வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய பா.ஜ.க. அரசின் தோல்வியை மறைக்கும் விதமாக அறிக்கை தர முடியாது” என்று ராஜினாமா செய்திருக்கும் நிலையில், வரலாறு காணாத வேலை இல்லாத் திண்டாட்டத்தை தனது ஆட்சிக் காலத்தில் உருவாக்கியிருக்கும் பிரதமர் மோடி இளைஞர்களுக்கு மாபெரும் துரோகத்தைச் செய்திருக்கிறார்.


குறிப்பாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பேரழிவினால் முதலில் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பவர்கள் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களும், பெண்களும்தான் என்பதை தற்போது வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களின் வேலை இல்லாத் திண்டாட்டம் 17.4 சதவீதமாகவும், பெண்களுக்கு 13.6 சதவீதமாகவும் உயர்ந்து விட்டது. அதேபோல் நகரத்தில் உள்ள இளைஞர்களின் வேலை இல்லாத் திண்டாட்டம் 18.7 சதவீதமாகவும், பெண்களுக்கு 27.2 சதவீதமாகவும் உயர்ந்து விட்டது. ஆக மொத்தம் சென்ற தேர்தலில் திரு நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்று நம்பி வாக்களித்த இளைஞர்கள், பெண்கள் மத்தியில் வேலை இல்லாத் திண்டாட்டம் 13.6 சதவீதம் முதல் 27.2 சதவீதமாக விண்ணளவிற்கு உயர்ந்து - அவர்களின் எதிர்காலம் இருட்டறையில் தள்ளப்பட்டுள்ளது.


வேலை வாய்ப்புகள் எதையும் உருவாக்காமல் “விளம்பர மோகம்” “வெட்டிப் பேச்சுகள்” “மத வெறி” போன்றவற்றை  மட்டுமே மூலதனமாக்கி இன்னொரு முறை வெற்றி பெற்று விட முடியும் என்ற பகற் கனவில் அடுத்த கட்டமாக அடுக்கடுக்கான பொய்ப் பிரச்சாரங்களுக்கு பிரதமர் மோடி துணிந்திருப்பது - இந்த நாட்டின் எதிர்காலம் எப்படிப்பட்ட பிரதமர் கையில் சிக்கித் தவித்துக் கொண்டுகிறது என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது.


மத்தியில் ஆளும் பாஜக அரசின் நிலை இப்படி பரிதாபமாக இருக்கிறதென்றால், தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் மட்டும் 80 லட்சம் பேர் பதிவு செய்து விட்டு என்றைக்கு வேலை கிடைக்கும் என்ற ஏக்கத்தில் காத்திருக்கிறார்கள். அதில் 24 முதல் 35 வயதுள்ள இளைஞர்கள் மட்டும் 30 லட்சம் பேர் என்ற அதிர்ச்சித் தகவலை அரசின் இணைய தளத்திலேயே காண முடிகிறது. சுய தொழில்களை ஊக்குவிக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அப்படியே முடங்கிப் போயுள்ளன என்றும், சுய தொழிலை ஊக்குவிப்பதில் தமிழகம் இந்திய மாநிலங்களில் கடுமையாக பின்தங்கி, 18 இடத்திற்கு கீழிறங்கி விட்டது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


2015-16 ஆம் ஆண்டிலேயே தமிழகத்தின் வேலை இல்லாத் திண்டாட்டம் இந்திய சராசரியான 3.7 சதவீதத்தை விட அதிகமாகி, 3.8 சதவீதம் வரை சென்று இப்போது அது மேலும் உயர்ந்து விட்டது. புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்காமல், அரசு வேலை வாய்ப்புகளிலும் முறைகேடான தேர்வுகள், லஞ்சம், லாவண்யம் என்ற அளவில் தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் எல்லாம் பெருத்த ஏமாற்றத்தில் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.


இந்த நேரத்தில் இரண்டாவது முதலீட்டாளர் மாநாடு என்று மீண்டும் ஒரு “கானல் நீர் மாநாடு” நடத்தி- இளைஞர்களை மேலும் மேலும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க அரசு. இதுமாதிரி நம்பிக்கைத் துரோகம் செய்துள்ள மத்திய பா.ஜ.க. அரசிடமும், ஊழலின் உறவிடமாக ஆட்சி செய்து, தொழிற்சாலைகளை துவக்க வரும் முதலீட்டாளர்களையும் “கமிஷன்” “கரெப்ஷன்” “கலெக்ஷன்” போன்ற ஈனச் செயல்களால் எட்டுகாத தூரம் துரத்தி அடிக்கும் முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசிடமும் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலகட்டம் நெருங்கி விட்டது என்பதையே இந்த புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன.


இளைஞர்களே விழிப்புணர்வுடன் இருந்து செயல்படுங்கள்! இளைஞர்கள் நலனில் எந்தவித அக்கறையும் காட்டாத அரசுகளை தூக்கியெறியுங்கள்!!


இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.