முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் இயற்கை மரணத்துக்காக வழங்கப்படும் உதவித் தொகை ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-


தமிழகத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கும், சிறு/குறு விவசாயிகளுக்கும், வாழ்க்கை முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு,  “தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்”என்ற சமூகபாதுகாப்புத் திட்டம் ஜெயலலிதாவால் 15.8.2005 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.  


தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும்  வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில் புதிய, விரிவுப்படுத்தப்பட்ட, சமூக பாதுகாப்புத் திட்டம்” முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்“”என்ற பெயரில் 2011ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டு செயலாக்கத்தில் உள்ளது. 


இத்திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ள விவசாயிகள் மற்றும் விவசாய குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி உதவி, திருமண உதவி, மகப்பேறு உதவித் தொகை, முதியோர் ஊதியம் ஆகியவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.


இந்த திட்டத்தின் கீழ் விவசாய உறுப்பினராக பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இயற்கை மரணம் எய்தினால், அவர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில், உதவித் தொகையாக ரூ.10,000/-வழங்கப் பட்டுவருகிறது. 


விவசாயிகள் நலனில் அக்கறைக் கொண்டுள்ள அம்மாவின் வழி நடக்கும் இந்த அரசு,  முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணத்திற்காக வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.10,000-லிருந்து ரூ.20,000/- ஆக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் எடப்பாடி கே .பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.