நீட் தேர்வு விவகாரம்: ஆதார் உதவியை நாட சிபிசிஐடி போலீசார் திட்டம்!
நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகாரில் 10 பேரின் புகைப்படம் வெளியிட்டுள்ள நிலையில் அவர்களின் பெயர் விவரங்களை அறிவதற்காக சிபிசிஐடி போலீசார் ஆதார் இணையதளத்தை அணுகியுள்ளனர்.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகாரில் 10 பேரின் புகைப்படம் வெளியிட்டுள்ள நிலையில் அவர்களின் பெயர் விவரங்களை அறிவதற்காக சிபிசிஐடி போலீசார் ஆதார் இணையதளத்தை அணுகியுள்ளனர்.
நீட் தேர்வில் நடந்த முறைகேடு இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. தேனி மருத்துவகல்லூரி மூலம் இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடர்பாக தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார், மொத்தம் 14 பேரை கைது செய்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் புலன் விசாரணை செய்து வருகின்றனர்.
அந்தவகையில் சென்னை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகம் சார்பாக ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில்., நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக 2 மாணவிகள், 8 மாணவர்கள் புகைப்படங்களை வெளியிட்டனர். அவர்களை பற்றி தகவல் தெரிந்தவர்கள் சி.பி.சி.ஐ.டி. சென்னை அலுவலகத்துக்கு 9443884395 என்ற செல்போன் எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் depccwcbcid@tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதனை தொடர்ந்து இந்த 10 மாணவர்களை பிடிப்பதற்கு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே 10 பேரின் புகைப்படம் மற்றும் கைரேகையை அளித்து இதுபோன்ற நபர்கள் இந்தியாவில் எங்கேயும் இருக்கிறார்களா? என கேட்டு கொண்டுள்ளனர். விரைவில் இது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்படும் என்றும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை எம்.பி.பி.எஸ் நீட் தேர்வில் மட்டும் நடைபெற்ற முறைகேடானது முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்விலும் நடைபெற்றிருக்கின்றதோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது தொடர்பாகவும் விரைவில் விசாரணை நடத்தப்படும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.