சென்னை: நீட் மசோதாக்களை நிறுத்திவைத்து, திருப்பி அனுப்பிவிட்டதாக மத்திய அரசு தமிழக சட்டத்துறைக்கு 22-09-2017 அன்று கடிதம் அனுப்பிய விவரங்களை சட்டத்துறை அமைச்சர் மறைத்து, நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதாக தவறான தகவலை தெரிவித்து தமிழக மக்களை அதிமுக அரசு ஏமாற்றி விட்டது என மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேசும் போது எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.


ஸ்டாலின் கேள்வி: 


தமிழக அரசு நிறைவேற்றிய நீட் மசோதா சம்பந்தமான 2 மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரவில்லை. அதை நிராகரித்துள்ளார் என 2017 செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதியே மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதை ஏன் தமிழக அரசு மறைத்தது. இதை முன்பே சொல்லியிருந்தால் மீண்டும் சட்டம் இயற்றி அனுப்பியிருக்கலாம். கடிதம் வந்து 19 மாதங்கள் ஆகியும், அதுக்குறித்து சட்டப்பேரவையில் ஏன் பதிலளிக்கவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் உண்மையை மறைத்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். 


சிவி சண்முகம் பதில்:


நீட் தேர்வு மசோதாக்கள் முறைப்படி நிராகரிக்கப்பட்டு வந்தால் சட்டம் இயற்ற தயாராக இருக்கிறோம். நீட் தேர்வு விலக்கு நிராகரிக்கப்படவில்லை. அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விலக்கு மசோதா நிராகரிப்பு பற்றி முறைப்படி தகவல் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார். மேலும் நீட் விவகாரத்தில் நான் பொய் சொல்லியதை நிரூபித்தால் பதவி விலகத்தயார் எனக்கூறினார். 


இதனையடுத்து அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பதிலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு செய்தது. அதேபோல நீட் விவகாரத்தில் பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறி சட்டமன்றத்தில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.