வாடிக்கையாளரை காத்திருக்க வைத்த ஹோட்டல்.... ரூ.7000 நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
ஒரு மணி நேரமாக காத்திருந்தும் உணவு வழங்காமல் அலட்சியம்: வாடிக்கையாளருக்கு 7000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்கும்படி தனியார் ஓட்டல் நிர்வாகத்துக்கு நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நெல்லை சிந்துப்பூந்துறை பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் கடந்த 27.02. 2022 அன்று நாகர்கோவிலில் இருந்து ராமநாதபுரத்துக்கு பேருந்தில் சென்றுள்ளார். முன்னதாக அவர் நாகர்கோயில் வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ( ஆரிய பவன்) ஹோட்டலில் இரவு உணவு வாங்க சென்றுள்ளார். நெய் ரோஸ்ட் புரோட்டா மற்றும் மஸ்ரூம் மசாலா தோசை ஆகியவை அடங்கிய உணவினை பார்சல் கேட்டுள்ளார். இதற்காக சுப்ரமணியன் 484 ரூபாய் பணத்தைக் கட்டி பில் பெற்றுள்ளார்.
வாடிக்கையாளரை தரக் குறைவாக நடத்திய ஹோட்டல் ஊழியர்கள்
இந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரம் ஆகியும் சுப்பிரமணியனுக்கு பார்சல் வழங்காமல் ஹோட்டல் ஊழியர்கள் கால தாமதம் செய்துள்ளனர். பின்னர் சென்று கேட்ட போது உங்களுக்கு வழங்க வேண்டிய பார்சலை வேறு ஒரு நபருக்கு மாற்றி கொடுத்து விட்டோம். தற்போது நீங்கள் கேட்ட உணவு காலியாகிவிட்டது இட்லி தோசை மட்டுமே இருக்கிறது என அலட்சியமாக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் தனது பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு ஊழியர்கள் ரசீது கொடுத்த பிறகு நாங்கள் பணத்தை திருப்பி தர மாட்டோம் என்றும் வேறு ஒரு நாளில் வந்து மீண்டும் உணவு வாங்கி செல்லுங்கள் எனவும் கூறியதோடு, சக வாடிக்கையாளர்கள் மத்தியில் சுப்பிரமணியனை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
ஹோட்டல் நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்த வாடிக்கையாளர்
ஹோட்டல் ஊழியர்களின் செயலால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுப்பிரமணியன் அன்று இரவு உணவு அருந்தாமல் பட்டினியோடு ராமநாதபுரத்திற்கு சென்றுள்ளார். இதையடுத்து தனது மன உளைச்சலுக்கு சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்தின் சேவை குறைபாடு காரணம் என்பதை சுட்டிக்காட்டி சுப்பிரமணியன் நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் 2 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கறிஞர் பிரம்மா மூலம் ஹோட்டல் நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்தார்.
வழக்கினை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் நீதிமன்றம்
வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சுப்ரமணியனின் வழக்கினை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணைய தலைவர் கிளாட்ஸ்டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனக சபாபதி ஆகியோர் சுப்பிரமணியனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் வழக்கு செலவு 2000 ரூபாய் சேர்த்து மொத்தம் 7000 ரூபாய் சம்பந்தப்பட்ட தனியார் ஓட்டல் நிர்வாகம் வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற சுப்ரமணியன்
சுப்ரமணியனுக்கு ஏற்பட்டதை போன்று நாள்தோறும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் இது போன்று வாடிக்கையாளர்களுக்கு இடர்பாடுகள் நேரிடுகிறது. இருப்பினும் பெரும்பாலானோர் இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு கடந்து விடுவார்கள் ஆனால் சுப்ரமணியன் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு தீர்வு கோரி இரண்டு ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற சம்பவம் அனைவரது கவனத்தையும் எடுத்துள்ளது.
மேலும் படிக்க | முரசொலி நில வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ