சென்னை: அதிமுக பொதுச் செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். அவரது மறைவைத் பின்னர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவி இடம் காலியாகியுள்ள நிலையில் ஜெயலலிதா வின் தோழி சசிகலா வர வேண்டும் என்று அதிமுக மூத்த நிர்வாகிகளும், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், அனைத்து அணி நிர்வாகிகளும் ஒட்டு மொத்தமாக வலியுறுத்தினார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று அவர்கள் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்கள். ஆண்டுக்கு ஒருமுறை கட்சியின் பொதுக் குழுவை கூட்ட வேண்டும் என்பது தேர்தல் கமிஷன் விதி. அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு அதிமுகவின் அவசர பொதுக்குழு கூட்டப்பட்டது. இந்த கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். முதல் அமைச்சர் மற்றும் அதிமுக பொருளாளர் மான ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவில் உரையாற் றினார்கள். அதன்பிறகு 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


இதனையடுத்து, முதல்வர் பன்னீர்செல்வம், மதுசூதனன், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல்களை எடுத்துக்கொண்டு சசிகலாவிடம் ஒப்படைக்க போயஸ் கார்டன் சென்றனர்.


இந்நிலையில், விழா நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மிகப் பிரமாண்ட அம்மா பேனர்கள் உடனடியாக சசிகலா பேனராக மாற்றப்பட்டது. இந்த பேனரில் அவருக்கு ஜெயலலிதா பூங்கொத்து கொடுப்பதுபோன்று இருந்தது.