அடுத்த ஆண்டு முதல் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு புது சீருடை
வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிக்கு நான்கு வகையான புது சீருடைகள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
2016-2017-ம் கல்வி ஆண்டில் பள்ளிக் குழந்தைகளின் வாசித்தல், எழுதுதல், கணிதத்திறன் சார்ந்த கற்றல் அடைவுத்திறன், கற்றல் கற்பித்தலில் புதிய உத்தியை பயன்படுத்துதல், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் பள்ளிகளில் ஒரு மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கும் 96 பள்ளிகளுக்கு கேடயம் வழங்கும் விழா சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நேற்று நடைபெற்றது.
அந்த விழாவை கலந்துக்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் சிறந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு கேடயங்களும், விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய 51 ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ்களும் வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
மாணவ-மாணவி நலனை கருத்தில் கொண்டு வேலை வாய்ப்பு பெறும் வகையில் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் வருகிற கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரசு பள்ளிக்கூட சீருடைகள் மாற்றப்படுகிறது.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு நிறத்திலும்,
6-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை வேற ஒரு நிறத்திலும்,
9 மற்றும் 10 வகுப்புகளுக்கு மற்றொரு நிறத்திலும்,
பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு வேற நிறத்திலும் என மொத்தம் 4 வகையாக சீருடைகள் மாற்றப்பட உள்ளது என அவர் விழாவில் கூறினார்.