தமிழகத்தில் 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலை நிலவும்: சென்னை ஆய்வு மையம்
இந்த வருடத்திற்கான வடகிழக்கு பருவமழை இந்த மாதம் (அக்டோபர்) இரண்டாம் வாரத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: தமிழகம் மற்றும் புதுசேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும். அதேபோல் வெப்பச் சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை மூன்று வாரங்களில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானத்தின் நிலை ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பெய்த தென்மேற்குப் பருவமழையின் அளவு 97 சென்டிமீட்டர். இது வழக்கமாக பெய்யும் அளவை விட சுமார் 10 சென்டிமீட்டர் அதிகமாக மழை பதிவாகி உள்ளது.
இந்த வருடத்திற்கான வடகிழக்கு பருவமழை இந்த மாதம் (அக்டோபர்) முதல் தொடங்க உள்ளது. அதாவது அக்டோபர் இரண்டாம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.