கோயமுத்தூரில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை?
கோயம்புத்தூரில் உள்ள ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோயம்புத்தூரில் உள்ள ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவையில் உக்கடம், அன்புநகர், குனியமுத்தூர் உள்ளிட்ட 7 இடங்களில் இன்று காலை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதாக தெரிகின்றது.
இலங்கையில் ஈஸ்டர் தின நாளில் குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டவர்களுடன் சிலர் தொடர்பில் உள்ளதாகக் கருதி இந்த சோதனை நடைபெற்றது.
காலை எட்டு மணிக்கு துவங்கிய இந்த சோதனை ஏழு இடங்களில் நடைபெற்றது. அன்பு நகர், போத்தனூர், மற்றும் குனியமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் இச்சோதனை நடைபெற்றது.
ISIS இயக்கத்துடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளின் போது இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமா அத் இயக்கத்தின் சஹ்ரானுடன் சிலருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மற்றொரு குற்றவாளி கேரளா ISIS தொடர்பு உள்ள பாலக்காட்டைச் சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 29 வயதான அந்த இளைஞன் தற்கொலை படையாக மாறுவதற்கு மனதளவில் தயாராகி வந்து கொண்டிருந்ததாகக் கூறியிருந்தார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது 3 தேவாலயங்களில் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ISIS தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து ISIS அமைப்புடன் தமிழகத்தில் உள்ள சில அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.