நிதி ஆயோக் கணக்கீடு தவறானது -அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு!
சுகாதாரத் துறையில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்கு பின்தங்கியுள்ளதாக நிதி ஆயோக் அமைப்பு தவறான தகவலை வெளியிட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சுகாதாரத் துறையில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்கு பின்தங்கியுள்ளதாக நிதி ஆயோக் அமைப்பு தவறான தகவலை வெளியிட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நிதி ஆயோக்கின் கணக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மத்திய அமைச்சரவைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் 99% தடுப்பூசி வழங்கி உள்ளோம் எனவும், ஆனால் நிதி ஆயோக் 79% என தவறான கணக்கை கொடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.
உலக வங்கியின் ஒத்துழைப்புடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் மத்திய நிதி ஆயோக் ஆண்டுதோறும் சுகாதாரம் தொடர்பான ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் கேரளா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. சுகாதாரக்கேடால் பல உயிர்களை பலி வாங்கிய பிகார் மற்றும் உத்திரபிரதேச மாநிலம் பின்தங்கிய நிலையில் உள்ளது.
நோய்கள் தாக்குமுன் காத்தால், விழிப்புணர்வு உண்டாக்குதல், வந்த பின்னர் மேலும் பரவாமல் தடுத்தல், கட்டுப்படுத்தி, குணப்படுத்த அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் உள்ளிட்ட 23 அம்சங்களின் அடிப்படையில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த 2015-16 ஆண்டுகளை அடிப்படையாக வைத்து 2017-18 ஆண்டுகளை மேற்கோளாக காட்டி இந்த ஆண்டு வெளியான அறிக்கையில் சுகாதாரத்தை பொருத்தமட்டில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் படுமோசமான மாநிலமாக உத்தரப்பிரதேசம், பிகார் மாநிலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்கு அடுத்தபடியாக முதல் மூன்று இடங்களில் ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்திற்கு 9-ஆம் இடம் அளிக்கப்பட்டது. முந்தைய பட்டியலில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நிதி ஆயோக் அமைப்பு தவறான தகவலை வெளியிட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.