கடந்த திங்ககிழமை அன்று மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் மாட்டுகறி திருவிழா நடத்தினார்கள். இந்நிலையில், கேரள மாநிலத்தை சேர்ந்த சூரஜ் என்கின்ற மாணவன் நேற்று தாக்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை ஐஐடி-ல் சூரஜ் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


சென்னை ஐஐடி-ல் படித்து வரும் கேரள மாநிலத்தை சேர்ந்த சூரஜ் என்கின்ற மாணவர் சகமாணவர்களுக்கு மாட்டிறைச்சி விருந்து அளித்த பொழுது, அவரை சகமாணவர்கள் அடித்து தாக்கிய ஒரு சம்பவம், மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 


சென்னையில் படிக்கும் சூரஜ் என்கிற மாணவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த பிரச்சனை மாணவர் பிரச்சனையாக மட்டுமல்லாமல், இரு மாநில பிரச்சனையாக மாறாமல் தமிழக அரசு முழு கவனம் செலுத்தவேண்டும். 


இந்தசம்பவம் மாணவர்கள் மத்தியில் எந்தவித வேறுபாடுகளையும் ஏற்படுத்திவிடக்கூடாது. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடிருக்கும் மாணவன் சூரஜ் விரைவில் குணமடைய வேண்டும். 


கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு, கல்லூரி வளாகம் பாதுகாப்பை தந்து, இந்த பிரச்சனை தொடர்பிரச்சனையாக மாறாமல் ஐஐடி வளாகம் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். மாட்டிறைச்சி சாப்பிடவது என்பது அவரவர் விருப்பம், அதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. 


இந்த நிகழ்வை தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.