பிளாஸ்டிக் அரிசி இல்லை: தமிழக அரசு ஆய்வில் தகவல்
உணவு ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை முடிவுகளின்படி, தமிழகத்தில் எங்கும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 7ம் தேதி நடந்த சோதனையில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக தகவல்கள் வெளியானது.
இதையடுத்து, தமிழகத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அமுதா உத்தரவிட்டார். மேலும், உணவு பாதுகாப்பு துறையினர் மாவட்ட வாரியாக குழுக்கள் அமைத்து உடனடியாக கடைகளில் ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் 300க்கும் மேற்பட்ட குழுக்கள் அனைத்து அரிசி வியாபார கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.
சேகரிக்கப்பட்ட அரிசி மாதிரிகள் அனைத்தையும் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் முதல்கட்டமாக ஆய்வு செய்ததில், அவற்றில் பிளாஸ்டிக் அரிசி கண்டறியப்படவில்லை.
அடுத்தகட்டமாக, சேகரிக்கப்பட்ட அரிசி மாதிரிகள் சென்னை, மதுரை, சேலம், கோவை, பாளையங்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள உணவு ஆய்வகங்களுக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதன் முடிவுகள் தெரிய வந்துள்ளன. அவற்றிலும் பிளாஸ்டிக் அரிசி எங்கும் கண்டறியப்படவில்லை.
இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் சேகரிக்கப்பட்ட அரிசி மாதிரிகளை நுண்ணுயிரியல் ஆய்வுக்கு உட்படுத்தியதில் பிளாஸ்டிக் அரிசி இல்லை என்று தெரிய வந்துள்ளது.
அரிசி மாதிரிகளில் புரதச்சத்து, மாவு சத்து உள்ளிட்ட என்னென்ன கூறுகள் உள்ளன என்பது தொடர்பாக உணவு ஆய்வகங்களில் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் சில தினங்களில் கிடைக்கும் என்றார்.