சென்னையில் தொடரும் மழை.. தமிழ்நாட்டில் வானிலை நிலவரம் - வெதர்மேனின் முக்கிய அப்டேட்
Chennai Rains: சென்னையில் நேற்று இரவு முதல் காலை வரை தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்றைய வானிலை குறித்தும், தமிழ்நாடு முழுவதுக்குமான மழை நிலவரம் குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் அவரது X பதிவில் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Rain Forecast Updates: தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நேற்று மாலை முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியது. இரவில் சற்று ஓய்ந்த மழையானது, நள்ளிரவில் மீண்டும் அதிகமானது. மேலும், இன்று காலையிலும் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருவதால், அலுவலகம் செல்வோர்; பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் உள்ளிட்டோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் (Chennai Rains) சாலைகளிலும் மழைநீர் அதிகம் தேங்கியிருக்கிறது. சாலையில் வாகன ஓட்டிகள் மழைநீர் மிதந்து காலையில் தங்களின் அன்றாட பணிகளுக்கு சென்றுகொண்டிருக்கின்றனர். பேருந்து, மின்சார ரயிலில் செல்வோரும் கூட கனமழையால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்று காலை செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டிருப்பதால் கூடுதல் சிக்கலையும் அவர்கள் சந்தித்துள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறையா?
இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலரும் எதிர்பார்த்திருந்தனர். இருப்பினும், மிதமான மழையே பெய்து வருவதால் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும், காலை 10 மணிவரை தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | இரண்டு அமைச்சர்கள் வந்திருக்கிறோம்! கலெக்டர் எங்க? கொந்தளித்த கேஎன் நேரு!
வெதர்மேனின் முக்கிய அப்டேட்
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று அவரது X பதிவில்,"தமிழ்நாட்டுக்கும் KTCC-க்கும் (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு) இன்று ஒரு அற்புதமான நாள். சென்னையைப் பொறுத்தவரை, நேற்று மாலை வேளையிலும், பின்னர் நள்ளிரவு முதல் அதிகாலை வரை 2ஆவது கட்டமாக மழை பெய்தது. இது வெறும் தொடக்கம்தான். தினமும் டமால் டூமீல் (இடி, மின்னலுடன்) தமிழ்நாடு முழுக்க தொடரும்" என பதிவிட்டுள்ளார்.
சென்னையில் அடுத்த 3 மணிநேரம்...
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 8.30 மணிக்கு அதன் X பக்கத்தில்,"அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக எழும்பூர், கிண்டி, மதுரவாயல், மாம்பலம், மயிலாப்பூர், நெமிலி, பள்ளிப்பட்டு, சோளிங்கர், திருத்தணி, வேளச்சேரி பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது" என குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, 7.30 மணிக்கு வெளியிட்ட ஒரு பதிவில்,"அமைந்தக்கரை, அயனாவரம், பெரம்பூர், பூவிருந்தவல்லி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, அம்பத்தூர், மாதவரம் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது" என குறிப்பிட்டிருந்தது.
தமிழ்நாட்டின் மழை நிலவரம்
மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் கணித்திருந்தது.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் அமைச்சர் நேரில் ஆய்வு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ