சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன் கருத்துக்கு பதிலளித்த பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் செங்கோட்டையன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராயப்பேட்டையில் அதிமுக மூத்த நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கோட்டையன் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர். பி.எச்.பாண்டியன், மனோஜ் கருத்துக்கள் உண்மைக்கு மாறானவை என்றும், அவர்களுடைய கருத்துகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில் தாங்கள் இருப்பதாக பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் செங்கோட்டையன் கூறினார்.


ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், அதிமுக கட்டுக்கோப்போடு, ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறது என்றும், கட்சி மீது அவதூறு பேசுபவர்களை அடையாளம் காட்டவே செய்தியாளர் சந்திப்பு என்றும் தெரிவித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கினோம் என்றும் பண்ருட்டியார் கூறினார். அனைத்து உறுப்பினர்களிடமும் வாக்கெடுப்பு நடத்த அவகாசம் இல்லாததால் பொதுக்குழு சசிகலாவை பொதுச்செயலாளராக பரிந்துரைத்தது என்றும் குறுப்பிட்டார்.


கட்சி தான் பெரியது என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம் என்றும், ராஜிவ்காந்தி வரும்போது, நட்பின் இலக்கணம் சசிகலா தான் என்று ஜெயலலிதா கூறினார் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார். துரோகிகளுடன் சேர்ந்து கொண்டு பி.எச்.பாண்டியன் இயங்குகிறார் என்றும் கூறினார். 


ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றதுமே மருத்துவமனைக்கு சென்றோம். ஆனால் பி.எச்.பாண்டியன், அடுத்த நாள்தான் மருத்துவமனைக்கு வந்தார். இப்போது பேட்டியில் கூட எனக்கு பதவியிருந்தால்தான் அதிமுகவில் இருப்பேன் என்று கூறியுள்ளார். அவருக்கு பதவிதான் முக்கியம். இவ்வாறு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 


எம்.ஜி.ஆர் மறைந்தபோதும் குழப்பம் விளைவித்தவர் பி.எச்.பாண்டியன் என்றும் ஜெயலலிதா மீது வழக்கு தொடர காரணமாக இருந்தவர் வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.


விஷம் கொடுத்தார்களா என்பது குறித்து யார் கருத்து கூறனும்? மருத்துவர்தான் சொல்ல வேண்டும். அப்படி எந்த மருத்துவரும் சொல்லவில்லை. ஒருவர் மீது பழி சுமத்துவது என்பது மிகவும் சுலபம். பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிக்க பொதுக்குழுவிற்கு அதிகாரம் கிடையாது என்று பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார். எம்ஜிஆரை திமுக பொதுக்குழுதான் கட்சியைவிட்டு நீக்கியிருந்தது. எனவே அவர் மனவருத்தம் காரணமாக, பொதுக்குழு மட்டும் இதுபோன்ற முடிவை தீர்மானிக்க கூடாது. எல்லா தொண்டர்களும் வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையை அதிமுகவில் எம்ஜிஆர் கொண்டுவந்தார். இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.


பொது அல்லது செயற்குழுவில் பி.எச். பாண்டியனும், மனோஜ் பாண்டியனும் கருத்துகளை கூறியிருக்கலாம் என்றும், பி.எச். பாண்டியன் குடும்பத்திற்கே பதவி கொடுத்த இயக்கம் அதிமுக என்றும் அவர் குறிப்பிட்டார். பி.எச். பாண்டியன் கட்சிக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை என்று செங்கோட்டையன் குற்றம்சாட்டினார். 


சசிகலா முதலமைச்சராவதை யாராலும் தடுக்க முடியாது என செங்கோட்டையன் திட்டவட்டமாக கூறினார். அதிமுகவில் கருத்து வேறுபாடுகள் கிடையாது என்றும், மு.க.ஸ்டாலின் டெல்லி அல்ல அமெரிக்கா சென்றாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார்.