பொதுமக்கள் பாதிக்காத வகையில் உடனடியாக தீர்வு காண வேண்டும் -ஸ்டாலின்
“அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடனும் தமிழக முதலமைச்சர் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கும் - பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுமூகமான தீர்வை காண வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்கிட வேண்டும், ஓய்வூதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும், விதிகளுக்குப் புறம்பாக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து செலவு செய்த, ஊழியர்களின் ஊதியப் பிடித்தம் 7,000 கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். போக்குவரத்துத்துறை அமைச்சர் முன்னிலையிலும் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.
ஆனால், போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை “நிதி இல்லை” என்ற காரணத்தைக் காட்டி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிராகரித்ததின் விளைவாக, மாநிலம் முழுவதும் இன்றைக்குப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார்கள்.
முன்கூட்டியே தொழிலாளர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை, போக்குவரத்துத்துறை அமைச்சர் உரியகாலத்தில் அக்கறையுடனும், பரிவுடனும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகாண எந்தவித முயற்சியும் மேற்கொள்ள முன்வராத காரணத்தால், போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்று, இன்றைக்குப் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
“உங்கள் கோரிக்கை நியாயமானதுதான்”, என்று போக்குவரத்துத்துறை அமைச்சரே தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்றைய தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அதற்கேற்ப அந்த நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக தொழிலாளர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வை எட்டுவதுதான் பொறுப்பான அரசின் கடமையாக இருக்க முடியும். அமைச்சர் அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதால், முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி உடனடியாக அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் உடனடியாக சுமூகமான தீர்வை காண வேண்டும் என்று பிரதான எதிர்கட்சித் தலைவர் என்றமுறையில் கேட்டுக் கொள்கிறேன்.
அதை விடுத்து, ஆளுங்கட்சியின் அண்ணா தொழிற்சங்கத்தைக் கொண்டு பேருந்துகளை ஓட்டுவோம் என்று அறிவித்து, அதற்கான முயற்சிகளை எடுப்பது, அதிமுகவின் வீண் ஜம்பத்தையும், ஆணவப்போக்கையும் வெளிப்படுத்தி, கொழுந்துவிட்டு எரியும் நெருப்புக்குள்ளே விரலைவிட்ட குழந்தையின் கதைபோல ஆகிவிடும் என எச்சரித்திடவும் விரும்புகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.