மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ள அரசு பள்ளிகளின் சத்துணவு மையங்கள் மூடப்படும் முடிவு அபத்தமானது என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-   


தமிழ்நாட்டில் 25-க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களை உடனே மூட மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நலத்துறை ஆணையிட்டுள்ளது. சத்துணவு அமைப்பாளர்கள் பணியிடம் குறைப்பு, செலவுக் குறைப்பு ஆகிய நோக்கங்களுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு அபத்தமானது. தமிழகத்தின் கல்விச்சூழலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.


தமிழக அரசின் சமூகநலத்துறை ஆணையர் அமுதவல்லி மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவுள்ள பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூடி, அவற்றில் பணியாற்றி வரும் சத்துணவு அமைப்பாளர்களை, காலியாக உள்ள இடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும். இந்தப் பணிகள் அனைத்தையும் திசம்பர் 28-ஆம் தேதிக்குள் முடித்து, அதுகுறித்த அறிக்கையை தமக்கு அனுப்பி வைக்கும்படி கூறியிருக்கிறார். அதன்படி குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட அரசு பள்ளிகளின் சத்துணவு மையங்கள் அதிரடியாக மூடப்பட்டு வருகின்றன.


சமூக நலத்துறை அறிவித்துள்ள திட்டத்தின்படி, ஒரு பள்ளியில் சத்துணவு சாப்பிடுவோர் எண்ணிக்கை 25-க்கும் குறைவாக இருந்தால், அங்குள்ள சத்துணவு மையங்களில் உணவு சமைக்கப்படாது. மாறாக, அந்த பள்ளியில் ஒரு சமையல் உதவியாளர் மட்டும் இருப்பார். அருகிலுள்ள மற்றொரு பள்ளியில் சமைத்துக் கொண்டு வரப்படும் உணவை வாங்கி மாணவர்களுக்கு அவர் வழங்குவாராம். மலைப்பகுதிகளாக இருந்தால் சத்துணவு அமைப்பாளர் இல்லாமல், சமையலர் மட்டும் இருந்து உணவு சமைத்து வழங்குவாராம்.


தமிழக அரசின் இந்த நடவடிக்கையை மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு பள்ளிக்கான சத்துணவு மையம் மூடப்பட்டாலும், அப்பள்ளிக்கு இன்னொரு பள்ளியிலிருந்து உணவு வந்து விடுகிறதல்லவா? இதிலென்ன பாதிப்பு? என்று எண்ணத் தோன்றும். ஆனால், இதில் இருவகையான பாதிப்புகள் உள்ளன. முதலாவது  வேலைவாய்ப்பு சார்ந்தது. இரண்டாவது கல்வி சார்ந்தது. தமிழகத்தில் 25க்கும் குறைவான மாணவர்கள் கொண்ட சத்துணவு மையங்களின் எண்ணிக்கை 8,000 ஆகும்.  ஒரு மையத்துக்கு ஓர் அமைப்பாளர்,  ஒரு சமையலர், ஒரு சமையல் உதவியாளர் இருப்பார்கள். இவர்களில் சமையல் உதவியாளர் தவிர்த்த  மீதமுள்ள இரு பணியிடங்கள் ரத்து செய்யப்படும் என்பதால், 16,000 பணியிடங்கள் ஒழிக்கப்பட்டு விடும். சத்துணவு அமைப்பாளர், சமையலர் ஆகிய பணியிடங்கள் ஆதரவற்ற பெண்களுக்கும், கைம்பெண்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இப்பணியிடங்கள் ஒழிக்கப்படுவதால் ஆதரவற்ற மற்றும்  கைம்பெண்கள் 16 ஆயிரம் பேரின் வேலைவாய்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.


ஒரு பள்ளியில் சமைத்து இன்னொரு பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. 25-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சத்துணவு மையங்களில் 99% தொடக்கப் பள்ளிகள் தான். அவற்றுக்கு அருகிலுள்ள பள்ளிகள் பெரும்பாலும் உயர்நிலைப்பள்ளிகளாகவோ, மேல்நிலைப் பள்ளிகளாகவோ தான் இருக்கும். தொடக்கப் பள்ளிகளுக்கான உணவு இடைவேளையும் சற்று முன்பாகவும், மற்ற பள்ளிகளின் உணவு இடைவேளை சற்று தாமதமாகவும் தொடங்கும். அதுமட்டுமின்றி, ஒரு பள்ளிக்கும் மற்றொரு பள்ளிக்கும் இடையிலான தொலைவு குறைந்தது 2 முதல் 3 கிலோ மீட்டர் இருக்கும். அதனால், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் தயாரிக்கப்படும் சத்துணவு வந்த பிறகு தான், தொடக்கப் பள்ளி குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்றால், அவர்கள் வழக்கமான நேரத்தை விட அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம்  வரை தாமதமாகும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை உணவுக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வைப்பதை விட கொடுமையான மனித உரிமை மீறல் இந்த உலகில் வேறு எதுவும் இருக்க முடியாது.


அதுமட்டுமின்றி, ஓரிடத்தில் தயாரிக்கப்பட்ட உணவை இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதில்  சுகாதாரம், தூய்மை சார்ந்த பல சிக்கல்கள் உள்ளன. இத்தகைய காரணங்களால் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உணவு கிடைக்கா விட்டாலோ, உணவில் சுகாதாரக் குறைபாடு இருந்தாலோ, அவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிடும் ஆபத்து இருக்கிறது. இடைநிற்றலைத் தடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டம், இடைநிற்றலை ஊக்குவித்து விடக்கூடாது. ஒருவேளை மாணவர்கள் அனைவரும் அரசு பள்ளிகளில் இருந்து விலக வேண்டும்; அதைக் காரணம் காட்டி பள்ளிகளை மூடிவிட வேண்டும் என்பதற்காகவே அரசு இவ்வாறு செய்கிறதா? என்பது தெரியவில்லை.


ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து படிப்பதை உறுதி செய்யவும்,  இடை நிற்றலைத் தடுக்கவும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே உணவு தயாரித்து வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். எனவே, சத்துணவு மையங்களை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும்.