அனைத்து குழப்பங்களுக்கும் பிள்ளையார் சுழி போட்டதே பன்னீர்செல்வம்தான்: டிடிவி தினகரன்
பாஜக அல்லது காங்கிரஸ் என ஏதேனும் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே அமமுகவின் நிலைப்பாடு: டிடிவி தினகரன்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேனி , சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தின் இடையே செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘மார்ச் மாதம் வரை நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறேன். பங்காளிகள் (அதிமுகவினர்) ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கி உள்ளனர். பிள்ளை பிடிப்பதுபோல் எங்கள் நிர்வாகிகளை தங்கள் கட்சிக்கு பிடித்து செல்கின்றனர். எங்கள் ஆட்களை அதிமுகவிற்கு பிடித்து செல்ல தமிழகம் முழுக்க 200- 300 கோடி ரூபாயை செலவு செய்துள்ளனர்.
கட்சியில் தவறு செய்த நிர்வாகிகள்தான், பிற கட்சிகளுக்கு செல்கின்றனர். நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் எங்களது கட்சியில் இருந்து நிறைய பேரை அழைத்து வருமாறு கூறி உள்ளனர். எங்களை கண்டு அதிமுகவினருக்கு பயம். அமமுக என்பது வீரர்கள் பட்டாளம், நிர்வாகிகள் சிலர் வெளியேறுவதால் அமமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொந்த பிரச்சனைக்காக கட்சியை விட்டு விலகியவர்கள், நான் கொள்கையை விட்டு விலகிவிட்டதாக கூறுவது தவறு.
மேலும் படிக்க | விவசாயிகளுக்கு வெற்றி... பொங்கல் தொகுப்பில் வருகிறது கரும்பு - முதல்வர் அறிவிப்பு!
இரு தேர்தலில் எங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டாலும், தொண்டர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். கூட்டணி குறித்து நிர்வாகிகளிடம் தற்போது பேசவில்லை. கட்சியை பலப்படுத்துவதுதான் தற்போதைய நோக்கம்.
தவறானவர்கள் கையில் அதிமுக இருக்கிறது. தேர்தல் பின்னடைவு ஏற்பட்டாலும் நாங்கள் கட்சி தொடங்கியதன் நோக்கம் மாறாது. அதிமுகவுடன் இணைய வாய்ப்பே இல்லை. அந்த தவறை செய்ய மாட்டோம். கூட்டணி தொடர்பான விசயத்தில் திமுகவை வீழ்த்தும் வகையில் எங்கள் பலம், எங்கள் உயரத்தை உணர்ந்து செயல்படுவோம். அமமுக வளர்ந்து வரும் இயக்கம். ஜெயலலிதா ஆட்சியை வரும்காலத்தில் ஏற்படுத்துவோம். ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இணைந்து திமுகவை வீழ்த்த கூட்டணி அமைத்து போராடினால் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமையும்.
அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என அதிமுகவினர் கூற வேண்டிய நிலை ஏற்பட்டதே அந்த கட்சிக்கு பலவீனம்தான். ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இயல்பாகவே அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்பது அனைவருக்கும் தெரியும்.
அதிமுக சின்னம் இல்லையேல் அந்த கட்சி நெல்லிக்காய் மூட்டை போல் சிதறிவிடும். அமமுக வில் என் குடும்ப உறுப்பினர்கள் யாரும் எந்த பொறுப்பிலும் இல்லை. சித்தி (சசிகலா) கட்சி செயல்பாட்டில் தலையிடுவதில்லை. அவர் அதிமுக பொதுச்செயலாளர் என்றுதான் கூறி வருகிறார்.
நிதானமாக பேசும் பன்னீர் செல்வம் இப்போது தவறான தகவலை பேசுகிறார். பன்னீர் செல்வம் தனது மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பேசியபடி அதிமுக ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் நடவடிக்கையில் நான் ஒருபோதும் ஈடுபடவில்லை.
திமுக மட்டும்தான் ஒருமுறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர், அப்போது திமுகவினரின் தீர்மானத்தை ஆதரித்து, அதிமுக ஆட்சிக்கு எதிராக பன்னீர் செல்வம் வாக்களித்தார். எனவே அப்படிப்பட்ட பன்னீர் செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி இணைந்து செயல்பட்ட போது நாங்கள் ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு எங்கள் ஆதரவு இல்லை எனவும் வேறு முதலமைச்சரை தீர்மானிக்க சட்டப்பேரவை கூட்டுமாறும் வலியுறுத்தினோம்.
ஆட்சிக் கவிழ்ப்புக்கான திமுக தீர்மானம் வேறு, நாங்கள் ஆளுநரை சந்தித்த காரணம் வேறு. அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டதே பன்னீர் செல்வம்தான். தனக்கு பதவி இல்லாமல் போனதால் தர்ம யுத்தத்தை நடத்தினார். தற்போது பன்னீர் செல்வத்துக்கும் சேர்த்து பழனிசாமி துரோகம் செய்து விட்டார்.
ஆனாலும் தற்போது தனது தவறை உணர்ந்து, எது சரி என உணர்ந்து பேசுவதால் அவரை ஆதரிக்கிறோம். அவரை ஆதரிக்க ஒரே சாதி என்பது காரணமல்ல. இரு தேசிய கட்சியில் (காங் , பாஜக) ஏதேனும் ஒரு கட்சியுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அந்த வாயப்பு ஏற்படாவிட்டால் தனித்து போட்டியிடுவோம்.
ஓபிஎஸ் இபிஎஸ் மாறி மாறி நோட்டிஸ் அனுப்பி கொள்வதால் அதிமுக சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படியே எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் அவரால் வெற்றி பெற முடியாது’ என்று கூறினார்.
மேலும் படிக்க | பொங்கல் பரிசுடன் கரும்பு - வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ