புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்திய துணை முதல்-அமைச்சர்.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 44 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். வீரமரணம் அடைந்தவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் ஆகியோர் ஆவார்.
பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தூத்துக்குடி மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு வீரர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இன்று புல்வாமா மாவட்டத்தின் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மாவீரர் சுப்பிரமணியன் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.