இபிஎஸ் Vs ஓபிஎஸ்... கட்டப்பஞ்சாயத்து செய்தாரா மோடி?
எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் பிரதமர் நரேந்திர மோடி கட்டப்பஞ்சாயத்து செய்திருக்கிறார் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
ஜெயலலிதா மறைவு, சசிகலா பொதுச்செயலாளரானது, ஓபிஎஸ்ஸின் தர்ம யுத்தம், சசிகலாவின் சிறைவாசம், ஓபிஎஸ் இபிஎஸ் என்ற இரட்டை தலைமை என அதிமுக பல காட்சிகளைப் பார்த்துவிட்டது.
இப்படிப்பட்ட சூழலில் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துவிட்டு இப்போது மீண்டும் அரசியல் பாதைக்கு வந்திருக்கிறார். நிலைமை இப்படி இருக்க நீண்ட காலமாக நிலவி வந்த இரட்டை தலைமையை மாற்றி ஒற்றைத் தலைமையின் கீழ் கட்சி செல்ல வேண்டுமென்ற முணுமுணுப்பு கட்சிக்குள் ஒரு தரப்பில் எழுந்தது.
நேற்று முன் தினம் நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடியின் ஆதரவாளராக கருதப்படும் மாதாவரம் மூர்த்தி ஒற்றை தலைமை குறித்த பேச்சை சத்தமாக ஆரம்பித்து வைத்தார்.
இதனையடுத்து கட்சியின் பொதுச்செயலாளராக இபிஎஸ் வர வேண்டுமென அவரது ஆதரவாளர்களும், இல்லை ஓபிஎஸ்தான் வரவேண்டுமென அவரது ஆதரவாளர்களும் குரல் எழுப்ப தொடங்க 23ஆம் தேதி நடக்கவிருக்கும் அதிமுக பொதுக்குழுவில் அடுத்த பூகம்பம் வெடிக்கும் என பலரால் கூறப்பட்டது.
ஆனால், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், தற்போது இரட்டை தலைமை குறித்த விவாதம் தேவைதானா என்று கேள்வி எழுப்பி ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அந்த பிரச்னைக்கு ஓபிஎஸ் பேச்சு முற்றுப்புள்ளி வைத்தாலும், இன்னொரு பிரச்னைக்கு ஆரம்பப் புள்ளி வைத்திருக்கிறது.
“துணை முதலமைச்சர் பதவிக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த அதிகாரமும் இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதன் பேரில் அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டேன்” என ஓபிஎஸ் பேசிய பேச்சு விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
சசிகலா சிறை சென்றதற்கு பிறகு டெல்லி சென்ற இபிஎஸ் மோடியை சந்தித்தார். அரசு முறை பயணம் என்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி வெளியில் கூறினார்.
ஆனால், தர்ம யுத்தம் தொடங்கி நடத்திக்கொண்டிருந்த ஓபிஎஸ் அந்தச் சமயத்தில் தனது யுத்தத்தை வாபஸ் பெற்றுவிட்டு இபிஎஸ்ஸுடன் இணைந்து பணியாற்ற தொடங்கினார். மேலும், அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
மோடியும், டெல்லி பாஜகவும் கட்டப்பஞ்சாயத்து செய்துதான் இபிஎஸ்ஸுடன் ஓபிஎஸ்ஸை இணக்கமாக போகவைத்து துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது என அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி பலரும் கூறினர். ஆனால் இதனை அதிமுக தரப்பு மறுத்துவந்தது.
மேலும் படிக்க | ஆன்லைன் ரம்மியால் சென்னையில் மற்றொரு தற்கொலை - தொடரும் அவலம்
இந்நிலையில் நேற்று பேசிய ஓபிஎஸ், பிரதமர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில்தான் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என கூறியிருப்பதன் மூலம் பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்தது திரைக்கு வந்துவிட்டது எனவும், ஒரு நாட்டின் பிரதமர் நாட்டை ஆள்வதை விட்டுவிட்டு ஒரு கட்சியின் பிரச்னைக்குள் ஏன் நுழைய வேண்டுமென நெட்டிசன்கள் தற்போது கேள்வி எழுப்பி விமர்சனம் செய்தும்வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR