சென்னை: தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்து செய்தி வெளிபடித்தயுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தியில் ஓ.பன்னீர்செல்வம்:-


இயேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


"அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன்" என்று அன்பின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைத்த இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த தியாகம், இரக்கம், பொறுமை, எளிமை, ஈகை போன்ற உயரிய வாழ்க்கை நெறிகளை மக்கள் பின்பற்றி ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்ந்தால் வாழ்வு மேன்மையுறும்.


புரட்சித் தலைவி அம்மா கிறிஸ்துவப் பெருமக்களின் நலனிற்காக, இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ மக்கள் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் புனிதப் பயணம் செல்வதற்கு 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தினை டிசம்பர் திங்கள் 2011 ஆம் ஆண்டு செயல்படுத்தினார்கள். கிறிஸ்துவ மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இதுவரை 2,340 பேர் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.


கிறிஸ்துவப் பெருமக்களின் மேம்பாட்டுக்கென புரட்சித் தலைவி அம்மா வகுத்த சீரிய திட்டங்களை, புரட்சித் தலைவி அம்மா காட்டிய வழியில் செயல்படும் அரசு சிறப்பான முறையில் தொடர்ந்து செயல்படுத்தும் என்று உறுதி கூறி, இயேசுபிரான் பிறந்த கிறிஸ்துமஸ் திருநாளில், உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளம் கனிந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.


இவ்வாறு அவர் கூறி உள்ளார்.