மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த பரிந்துரை அறிக்கையை விரைந்து தாக்கல் செய்யும்படி ரோகிணி ஆணையத்திற்கு அரசு ஆணையிட வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டில், தொகுப்பு முறையில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆணையம் அமைக்கப்பட்டு 1050 நாட்களாகியும் அறிக்கை தாக்கல் செய்யப்படாதது கவலையளிக்கிறது.


மத்திய அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டு 1990-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, 1993-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. அதேபோல், மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம், 2006&ஆம் ஆண்டில் எனது போராட்டத்தால் நிறைவேற்றப் பட்டு, 2008-ஆம் ஆண்டு முதல் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இட ஒதுக்கீட்டு அறிமுகம் செய்யப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும், இட ஒதுக்கீட்டின் பயன்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்னும் சென்றடையவில்லை. அந்தக் குறையை போக்கவே ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டது.


நீதிபதி ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கம் மிகவும் சிறப்பானது. அந்நோக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால், எந்த நோக்கத்திற்காக ஆணையம் அமைக்கப்பட்டதோ, அதை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் ஏமாற்றமளிக்கிறது. 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி நீதிபதி ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்ட போது அடுத்த 12 வாரங்களில், அதாவது 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் பாதிக்குள், அதன் பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருந்தது. ஆனால், 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய  ரோகிணி ஆணையம், 33 மாதங்களுக்கு மேலாகியும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதுவரை ஆணையத்திற்கு 9 முறை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்போதைய பதவிக்காலம்  வரும் ஜனவரி மாதம் முடிவதற்கு முன்பாவது அறிக்கையை தாக்கல் செய்யுமா? என்பது தெரியவில்லை.


ALSO READ | இந்தியாவில் ஒரே நாளில் 78,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!


நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே செல்வதற்கு எந்த நியாயமும் இல்லை. ஏனெனில், நீதிபதி ரோகிணி ஆணையம் அமைக்கப்பட்டு ஓராண்டு நிறைவடையும் முன்பே, 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அதன் முதலாவது கலந்தாய்வு அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ரோகிணி ஆணையத்தின் முழுமையான பரிந்துரை அறிக்கையில் இடம்பெற வேண்டிய 90 விழுக்காட்டுக்கும் கூடுதலான அம்சங்கள் கலந்தாய்வு அறிக்கையிலேயே இடம் பெற்று  இருந்தன. அவற்றுக்கு இறுதி வடிவம் கொடுத்து தாக்கல் செய்ய இரு வாரங்கள் போதுமானது என்ற நிலையில், இரு ஆண்டுகளாகியும் இறுதி பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்படாதது வியப்பளிக்கிறது.


ரோகிணி ஆணையத்தின் கலந்தாய்வு அறிக்கையில் இடம் பெற்றுள்ள புள்ளிவிவரங்கள் ஓபிசி இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் மொத்தம் 2633 சாதிகள் உள்ளன. அவற்றில் வெறும் 10 சாதிகள் மட்டும், ஓபிசி வகுப்புக்கான 27% ஒதுக்கீட்டில், 25 விழுக்காட்டை, அதாவது மொத்த ஒதுக்கீட்டில் 6.75% ஒதுக்கீட்டைக் கைப்பற்றிக் கொள்கின்றன என்பதை ரோகிணி ஆணையம் கண்டறிந்தது. அதுமட்டுமின்றி, 27% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகளாகியும் 983 சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டின் பயன்கள் இன்று வரை கிடைக்கவில்லை என்பதும் நீதிபதி ரோகிணி ஆணையத்தின் கண்டுபிடிப்புகளில் முக்கியமானதாகும்.


பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டின் பயன்களை அந்தப் பிரிவில் உள்ள  983 சாதிகளால் அனுபவிக்க முடியவில்லை என்பது இந்தியாவில் சமூகநீதி முழுமையடையவில்லை என்பதையே காட்டுகிறது. இச்சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டை 3 தொகுப்புகளாக பிரித்து இதுவரை இட ஒதுக்கீட்டை அனுபவிக்காத சாதிகளுக்கு 10%, ஓரளவு அனுபவித்த சாதிகளுக்கு 10%, அதிகமாக அனுபவித்த சமூகங்களுக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் நீதியரசர் ரோகிணி ஆணையம் தீர்மானித்திருக்கிறது. இந்த பரிந்துரைகள் அரசிடம் வழங்கப்பட்டு, உடனடியாக செயல்படுத்தப்பட்டால் மட்டும் தான் அடித்தட்டு மக்களுக்கு இழைக்கப்படும் சமூகநீதி துரோகங்களுக்கு முடிவு கட்ட முடியும். மாறாக, ரோகிணி ஆணைய அறிக்கையை பெறுவதில் செய்யப்படும் தாமதம் சமூக அநீதி தொடர்வதற்கே வழி வகுக்கும்.


எனவே, மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த பரிந்துரை அறிக்கையை விரைந்து தாக்கல் செய்யும்படி ரோகிணி ஆணையத்திற்கு அரசு ஆணையிட வேண்டும். ஆணையத்தின் பரிந்துரைகளை ஆய்வு செய்து ஓபிசி பிரிவிலுள்ள அனைத்து சாதிகளுக்கும் உரிய இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.