அமமுகவில் இருந்து விலகிய இசக்கி சுப்பையா வரும் 6-ஆம் தேதி அதிமுக-வில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் அமைச்சரும், அமமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான இசக்கி சுப்பையா அக்கட்சியில் இருந்து விலக உள்ளார் என்றும், அதிமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில்,  தென்காசியில் இசக்கி சுப்பையா தனது ஆதரவாளர்களுடன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 


இச்சந்திப்பில் அவர் தெரிவிக்கையில்.,  "எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கத்தினால் அடையாளம் காட்டப்பட்டவன் நான். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டியால் மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். நான் குறைந்த காலமே அமைச்சராக இருந்ததாக என்னை கிண்டல் செய்துள்ளார், என்னை அடையாளம் காட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதிமுக-வில் என்னை அடையாளம் காட்டியது தினகரன் அல்ல, என்னை அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா. தினகரன் ஏன் தவறாகவே பேசுகிறார் என தெரியவில்லை. இது தலைமைக்கு அழகல்ல எனவே அமமுக-வில் இருந்து நானும் எனது ஆதரவாளர்களும் விலகுகிறோம்" என தெரிவித்தார்.


அமமுக-வில் இருந்து விலகிய பின்னர் பாஜக மற்றும் திமுகவில் இருந்து அழைப்பு வந்தது. மக்களின் முதல்வராக, தொண்டர்களின் முதல்வராக பழனிசாமி திகழ்கிறார். நானும் என் தொண்டர்களும் தாய் கழகத்திற்கே செல்கிறோம். என்னுடன் இருந்தவர்கள் விருப்பத்தின் பேரில் அதிமுக-வில் இணைகிறேன் என தெரிவித்த அவர் வரும் 6-ஆம் தேதி தென்காசியில் நடைபெற உள்ள விழாவில், 20 ஆயிரம் பேருடன் முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைய இருப்பதாக தெரிவித்தார்.


இவருக்கு முன்னதாக அமமுக-வில் இருந்து தங்க தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி ஆகியோர் விலகிய நிலையில், தற்போது இசக்கி சுப்பையாவும் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.