டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் சென்ற நபருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக தகவல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் 147 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதற்கு, அடுத்து 2-ஆவது அதிகபட்ச எண்ணிக்கையாக கேரளாவில் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா 16 பேரும், கர்நாடகாவில் 13 பேரும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. 


கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அண்மையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய 56 வயது நபருக்கும், ஸ்பெயினில் இருந்து திரும்பிய 26 வயது இளம்பெண்ணுக்கும் கொரோனா உறுதியானதால், அவர்கள் மருத்துவமனைகளில் தனிவார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 


மேலும், அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் இருந்தவர்களை பரிசோதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்... பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். டெல்லியில் இருந்து சென்னை வந்த 20 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியானது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அந்த இளைஞர் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். 


கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞரின் உடல்நிலை சீராக இருக்கிறது. அந்த இளைஞர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதை கண்டறிய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நபர் ரயில் மூலம் சென்னை வந்துள்ளார். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம் பொறியாளர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனார். மாஸ்க், சானிடைசர், உடல் வெப்ப அளவிடும் கருவியை அதிக விலைக்கு விற்றால் நாளை முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.