அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவும், சசிகலாவும் பேசிய வீடியோ உரையாடலை விரைவில் வெளியிடுவேன் என்று சசிகலா சகோதரர் திவாகரன் மகன் ஜெயானந்த் திவாகரன் கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல் - அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவரின் மரணம் அதிமுகவை மற்றும் அல்ல தமிழகத்தையே உலுக்கியது. 


அதன் பிறகு அதிமுக சசிகலா ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு அணியாகவும் உடைந்தது. ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 


இந்தநிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் திவாகரன் தனது பேஸ்புக்கில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஒரு கருத்தை எழுதியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது-


கொலை பழி சுமத்தியும் அம்மா சிகிச்சை படத்தை வெளியிடவில்லை. காரணம், பச்சை கவுன் உடையில், அம்மாவை எதிரிகள் பார்க்கக்கூடாது என்பதே ஒரே காரணம். இது தியாகத்தலைவி சின்னம்மாவின் செயல். சிங்கத்தை நாங்கள் சிங்கமாகவே பூ உலகை ஆளுவதற்கு ராஜ மரியாதையுடன் அனுப்பி வைத்தோம். 


ஆனால், ஓ.பி.எஸ்., கேவலம் ஓட்டுக்காக புரட்சித்தலைவி அம்மாவை பிணப்பெட்டியில் வைத்து ஓட்டு கேட்கிறார்.


உண்மை வலிமையானது. ஒரு நாள் புரட்சித்தலைவி அம்மாவும், தியாக தலைவி சின்னம்மா(சசிகலா) இருவரும் ஆஸ்பத்திரியில் நடத்திய உரையாடல் வீடியோ வெளிவந்தால்...? பி.எச். பாண்டியன், மனோஜ் பாண்டியன், ஓ.பன்னீர்செல்வம் இவர்களை என்ன செய்யலாம்...? அந்த நாள் மிக விரைவில்.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


விரைவில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவும் பேசிய உரையாடல் அடங்கிய வீடியோவை ஜெயானந்த் வெளியிடுவார் என தெரிகிறது.