Pa Ranjith Attacking Questions Towards DMK Governemt: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் (BSP Leader Armstrong) மீது சென்னை பெரம்பூரில் கடந்த 5ஆம் தேதி ஒரு கும்பல் சராமாரி தாக்குதல் நடத்தியது. உணவு டெலிவரி நபர்கள் போல் வேடமிட்டு அப்பகுதியில் இருந்த நபர்கள், ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து கத்தி மற்றும் அரிவாள் ஆகியவற்றால் கொடூரமாக வெட்டினர். ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர்கள் இருவரும் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆம்ஸ்ட்ராங்கை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி அன்றே உயிரிழந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் (Armstrong Murder) நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது உடல் செங்குன்றம் அருகே உள்ள பொத்தேரி எனும் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.


உண்மையான குற்றவாளிகள் யார்?


இதுவரையில் 11 பேர் இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணையில் உள்ளனர். இருப்பினும் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை எனவும் இவர்களை ஏவியவர்கள் யார் என போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் பகுஜன் சமாஜ் கட்சியின் (Bahujan Samaj Party) தேசிய தலைவர் மாயாவதி, ஆளும் திமுக கூட்டணியில் விசிக தலைவர் திருமாவளவன் உள்பட பலரும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் கொலை : சரண்டைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் இல்லை - திருமாவளவன்


இந்நிலையில், கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடன் பல வருடங்களாக நெருக்கமாக இருந்த திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் நேற்று இரவு அவரது X பக்கத்தில் தமிழ்நாடு அரசை நோக்கி சராமாரியாக கேள்விகளை எழுப்பியிருந்தார். குறிப்பாக, இந்த கொலைக்கு பின்னால் ஆருத்ரா கோல்ட் இருக்கிறதா என்பதில் காவல்துறை என்ன நிலைப்பாட்டில் உள்ளது என கேள்வி எழுப்பியிருக்கிறார். 


ஆருத்ரா கோல்ட் பின்னணி...?


முன்னதாக ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப் பழி நடவடிக்கையாகவே ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார் என போலீசார் தரப்பில் தெரிவித்திருந்தனர். ஆனால், ஆருத்ரா கோல்ட் மோசடியில் (Arudra Gold Scam) பாதிக்கப்பட்ட பலருக்கும் ஆம்ஸ்ட்ராங் செட்டில்மெண்ட் வாங்கிக் தந்ததாகவும், அதில் ஏற்பட்ட மோதலில்தான் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இருப்பினும், இதுகுறித்த ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 


மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலையை ஒட்டி தமிழ்நாடு அரசுக்கு இயக்குநர் பா. ரஞ்சித் ஏழு முக்கிய கேள்விகளையும் எழுப்பியிருக்கிறார். அதில் அவர்,"கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம்.


பா. ரஞ்சித்தின் 7 கேள்விகள்


அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே ஆம்ஸ்ட்ராங்கிற்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். இதனையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும், சமூக வலைத்தள ஊடகங்களில் வன்மத்தை பரப்பிக் கொண்டிருப்பவர்களிடம் சில கேள்விகள்" என அந்த 7 கேள்விகளையும் குறிப்பிட்டுள்ளார். அவை வரிசையாக பின்வருமாறு:


- "சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்?" என்பதை முதல் கேள்வியாக எழுப்பியிருக்கிறார். 


மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 'அரசியல் பின்னணி இல்லை' - போலீசார் சொல்வது என்ன?


படுகொலைக்கு பின்னால் ஆருத்ரா?


- "படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்த கயவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே இதை செய்திருப்பதாக காவல் துறையினரும் அறிவித்திருக்கிறார்கள். சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல் துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். 


இதை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல் துறை வந்து விட்டதா? இதற்குப் பின்னால் ஆருத்ரா இருக்கிறதென்பது குறித்த பார்வையில் காவல்துறையின் நிலைப்பாடென்ன? பல செய்திகளை உலவ அனுமதித்து இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு அலட்சியமாக இருப்பது ஏன்? ஊடகங்களும் இதுகுறித்து கேள்வி எழுப்ப மறுப்பது ஏன்?" எனவும் காவல்துறையின் விசாரணையை கேள்விக்குட்படுத்தி உள்ளார். 


பதற்றமும் அச்சுறுத்தலும்


- "சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்" என்றார்.


மிகப்பெரிய வஞ்சக செயல்


தொடர்ந்து,"பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்தூர் பகுதியில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம். 


திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்த பகுதி அடங்காது என்று, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும்" என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி தொடர்ந்து வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள் குறித்தும் கேள்வி எழுப்பியிருக்கிறார். 


மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவிடம்... நீதிமன்றம் அனுமதி - அடக்கம் செய்யும் இடமும் உறுதியானது!


'வாக்குக்கு மட்டுமே சமூக நீதியா'


- "திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?" என திமுக அரசு மீதான தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். 


ஆம்ஸ்ட்ராங் ரவுடியா...!


- "அண்ணனின் படுகொலையையொட்டி எழுந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையை கையாளத் தெரியாமல், மாற்றுக் கதையை வலைத்தளங்களில் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் வலைத்தள சமூகநீதி காவலர்களும் சில ஊடகங்களும்!. 


'அவரே ஒரு ரவுடி', 'ஒரு ரவுடியை கொல்வது எப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியும்', 'கட்டப்பஞ்சாயத்து செய்பவர்', 'பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்' என ஆளாளுக்கு தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கொலை நடந்த நடுக்கம் குறைவதற்கு முன்பே இத்தகைய கருத்துருவாக்ககங்களை பேசுவதற்கு பின்னே இருப்பது யார்? என்ன?


'ஒடுக்குதலுக்கு எதிராக கிளெர்ந்தெழுதல்...'


ஆதிக்க வர்க்கத்தாரே! எங்களின் சுயமரியாதையின் பொருட்டு நாங்கள் கிளெர்ந்தெழுவதை ரவுடித்தனம் என்கிறீர்கள். வருவோருக்கெல்லாம் லட்சக்கணக்கான புத்தகங்களை அன்பளிப்பாய் கொடுத்தவர், தம்மமே மானுட சமூகத்தின் விடுதலையை தரும் என்று பாபாசாகேப் வழியில் பௌத்தத்தை முன்னெடுத்தவருக்கு எதிராய் இத்தகைய கதைகளை உருவாக்குவதின் மூலம் உங்களை நீங்களே திருப்திப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், எங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும், ஒடுக்குதலுக்கு எதிராக ஆர்ம்ஸ்ட்ராங் போல கிளெர்ந்தெழுகிறவர்களால் நாங்கள் பெற்ற எழுச்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. 


முடிவாக, சிறுவயது முதலே அண்ணனின் அன்பில் ஈர்க்கபட்டவன் நான். திரைத்துரையில் நான் வந்த பிறகு என் வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் எந்நாளும் அக்கறை கொண்டு என்னை பாதுகாப்பு வளையத்தில் வைத்திருந்தவர். பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியல் பாதையில் எவ்வித சமரசமுமின்றி தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அண்ணனை இழப்பது என்பது என் வாழ்வில் மிகப்பெரிய பின்னடைவாகவே நான் கருதுகிறேன். இதை சரி செய்ய அவரின் பேச்சுகளும் சிந்தனைகளுமே என்னை (எங்களை)வழிநடத்தும்" என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க | ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை காவல் ஆணையர் அருண்!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ