ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவிடம்... நீதிமன்றம் அனுமதி - அடக்கம் செய்யும் இடமும் உறுதியானது!

BSP Leader Armstrong Last Rites: திருவள்ளூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்யலாம் எனவும் கட்சி இடத்தில் நினைவிடமும் அமைக்கலாம் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jul 7, 2024, 03:20 PM IST
  • செங்குன்றம் பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்ய முடிவு
  • பெரம்பூரில் மணிமண்டபம் அமைக்க அனுமதி.
  • அரசு மரியாதை குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கும்.
ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவிடம்... நீதிமன்றம் அனுமதி - அடக்கம் செய்யும் இடமும் உறுதியானது! title=

BSP Leader Armstrong Last Rites Latest News Updates: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் தற்போது பெரம்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பள்ளிக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அளித்து உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவும் பிறப்பித்திருக்கிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பிற கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இன்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

மாயாவதி அஞ்சலி

குறிப்பாக, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி உத்தர பிரதேசத்தில் இருந்து இன்று விமானம் மூலம் சென்னைக்கு வருகை தந்தார். தொடர்ந்து பெரம்பூரில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய மாயாவதி இந்த கொலை வழக்கின் உண்மையான குற்றவாளிகளை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் கட்சித் தொண்டர்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என கூறிய மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு தொடர்ந்து கட்சி ஆதரவாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 'அரசியல் பின்னணி இல்லை' - போலீசார் சொல்வது என்ன?

திருவள்ளூரில் உறவினரின் நிலம்

முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பொது இடத்தில் அடக்கம் செய்ய கோரிக்கை வைத்து அவசர மனு ஒன்றை ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மனு அளித்திருந்தார். மேலும் இந்த மனு மீதான விசாரணையில், பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதி குடியிருப்பு பகுதி என்பதால் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி மறுத்து விட்டதாகவும், தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, பின் வேறு இடத்தில் மணிமண்டபம் கட்டுவது குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க உயர் நீதிமன்றம் மனுதாரர் பொற்கொடிக்கு அவகாசம் வழங்கியிருந்தது.

வழக்கு விசாரணையின் போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தற்போது உடலை அடக்கம் செய்ய அரசு 200 சதுர அடி நிலம் ஒதுக்க தயாராக உள்ளதாகவும், திருவள்ளூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர் ஒரு ஏக்கர் நிலம் தர தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது. அங்கு மணிமண்டபம் அமைக்கலாம் எனவும் தெரிவித்தார்.

குடியிருப்பு நிலம்...

பொற்கொடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, பெரம்பூரில் உறவினருக்கு சொந்தமான 7,500 சதுர அடி நிலம் உள்ளது. அதில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலை அடக்கம் செய்ய அரசு அனுமதி வழங்கி வழங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார். பெரம்பூரில் மனுதாரர் தரப்பில் தெரிவித்த 7,500 சதுர அடி நிலம் தொடர்பான வரைபடத்தைப் பெற்று பார்வையிட்ட நீதிபதி, எல் வடிவில் அமைந்துள்ள இந்த இடம், குடியிருப்பு நிலம் என்பதால் அதில் எப்படி அனுமதி வழங்க முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க | 'ஆம்ஸ்ட்ராங் நிறைய பேரை படிக்க வச்சாரு...' உடைந்த குரலில் பேசிய வெற்றி மாறன்

மேலும், இந்த இடத்தில் அடக்கம் செய்வது தொடர்பாக அரசிடம் தான் புதிதாக மனு அளிக்க வேண்டும். இப்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, புதிய இடத்தில் அரசு அனுமதி பெற்று மணிமண்டபம் அமைக்கலாம் எனத் தெரிவித்தார்.

வேறு இடத்தில் மணிமண்டபம்

குடும்ப உறுப்பினர் நிலத்தை உங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும். அரசு அனுமதி பெற வேண்டும். அதுவரை உடலை பள்ளியிலேயே வைத்திருக்க முடியாது. நாளை பள்ளி திறக்கப்பட வேண்டும்.  ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி உடல் முன் அமர்ந்து எப்போதும் அழுது கொண்டிருக்க முடியாது. இந்த துயரத்தில் இருந்து அவர் மீண்டும் வர வேண்டும். ஆம்ஸ்ட்ராங் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும். முதலில் அரசு கூறும் இடத்தில் அடக்கம் செய்த பின், வேறு இடத்துக்கு மாற்றலாம்.

புதிய இடத்தில் அடக்கம் செய்வதற்கான, மணி மண்டபம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆய்வு செய்ய வேண்டும். அந்த இடம் குடியிருப்பு பகுதி என்பதால் உடலை அடக்கம் செய்ய இயலாது. இதற்கு சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார். கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்ய கோரிய விண்ணப்பத்தை மாநகராட்சி நிராகரித்து விட்டதால் இந்த வழக்கு செல்லாததாகிவிட்டது எனத் தெரிவித்த நீதிபதி, நீதிமன்றம் தனது அதிகார வரம்பை தாண்ட முடியாது என்றும் அரசுதான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ்காந்தி நினைவிடம் உள்ளது. ஆனால், உடல் டில்லியில் தகனம் செய்யப்பட்டது. அதேபோல, உடலை அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு விசாலமான இடத்தை தேர்ந்தெடுத்து, அரசு அனுமதி பெற்று மணிமண்டபம் அமைக்கலாம். எதிர்காலத்தில் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தாலும் இடையூறுகள் இருக்காது எனவும் நீதிபதி குறிப்பிட்டார். 

இதையடுத்து, தற்போதைக்கு அரசு ஒதுக்கும் நிலத்தில் அடக்கம் செய்து விட்டு, பின் வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து விளக்கத்தை பெற்று தெரிவிக்கும்படி மனுதாரர் பொற்கொடி தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மனுதாரரிடம் விளக்கம் பெற்றதை அடுத்து இந்த மனு மீது நீதிபதி உத்தர பிறப்பித்துள்ளார். 

பொத்தூரில் அடக்கம்

அதில் செங்குன்றம் அடுத்துள்ள பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்யலாம்; பெரம்பூரில் நினைவிடம் அமைக்கலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார். பெரம்பூரில் பகுஜன் சமாஜ் அலுவலகத்தில் அடக்கம் செய்ய கூடாது என்பது தான் பிரச்னையே தவிர அங்கு மணிமண்டபம் கட்ட எந்த பிரச்சனையும் இல்லை என்றும்,  கண்ணியமான முறையில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்படவேண்டும் எனவும் விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இறுதி ஊர்வலத்துக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

அரசு மரியாதை?

ஆம்ஸ்ட்ராங் நினைவாக நினைவிடம், மருத்துவமனை அமைக்க விரும்பினால் அரசை அணுகி உரிய அனுமதிகளை பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும் அரசு மரியாதை குறித்து நீதிபதி தனது உத்தரவில், "கடைசி நேரத்தில் அரசு மரியாதை கேட்கிறார்கள், அரசு மரியாதை கோரிய மனு நிராகரிக்கப்பட்டால் அரசுக்கு அவப்பெயர் வரும். அரசின் நிலையை மனுதாரர் தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு பெருந்தன்மையுடன் செயல்பட்டுள்ளது" என குறிப்பிட்டார். 

மேலும் படிக்க | தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கவலையளிக்கிறது - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செலவப்பெருந்தகை விமர்சனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News