சென்னை: இன்று நாஞ்சில் சம்பத் போயஸ்தோட்டத்தில் பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் இருப்பவர் நாஞ்சில்சம்பத்  கடந்த 2012-ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக வில் இணைந்தார். சமீபத்தில் அதிமுக சார்பில் வழங்கப்பட்ட இன்னோவா காரை தலைமைக்கழகத்தில் திரும்ப ஒப்படைத்தார். இதனால் அவர் அதிமுக வில் இருந்து விலகுவார் என்று கூறப் பட்டது.


இந்நிலையில் நாஞ்சில் சம்பத் இன்று காலை திடீர் என்று போயஸ் கார்டன் சென்றார். அங்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.


பின்னர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


அதிமுக பொது செயலாளர் சின்னம்மாவை சந்தித்ததில் மனநிறைவாக இருக்கிறேன். கட்சிக்காக மிக தீவிரமாக மீண்டும் களம் இறங்குகிறேன். தமிழ் நாடு முழுவதும் சின்னம்மா தலைமையை ஆதரித்து உரையாற்றுவேன். 


அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துரைப்பேன். வருகிற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக இமாலய வெற்றி பெற பிரசாரம் செய்வேன். 


இன்று பொது செயலாளரை சந்தித்த போது அவர் ஏன் காரை கொடுத்துவிட்டீர்கள், அம்மா உங்களுக்காக தந்த கார் அது. நீங்கள் காரை விட்டுச் சென்றதை கேள்விப்பட்டதும் , உடனே காரை உங்கள் வீட்டுக்கு கொடுத்து அனுப்ப நினைத்து இருந்தேன். இப்போது அந்த காரை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.


அம்மா மறைவுக்கு பிறகு தனித்து விடப்பட்ட மாதிரி இருந்தது. பொது வாழ்க்கை போதும் என்ற முடிவுக்கு வந்தேன். அதன்படி இன்று சந்தித்தேன்.


இவ்வாறு அவர் கூறினார்.