சென்னையில் காற்று மாசுபாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி!
உலக மாநகரங்கள் நாளை (World Cities Day) முன்னிட்டு, பசுமைத் தாயகம் சார்பில் சென்னையில் `காற்று மாசுபாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி` நடைபெற்றது!
சென்னை: உலக மாநகரங்கள் நாளை (World Cities Day) முன்னிட்டு, பசுமைத் தாயகம் சார்பில் சென்னையில் "காற்று மாசுபாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி" நடைபெற்றது!
வழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒருபகுதியாக பசுமைத் தாயகம் அமைப்பினர் திநகர் பேருந்து நிலையம், பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகம், சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.முன்னாள் மத்திய இணை அமைச்சர், ஏ.கே. மூர்த்தி, பசுமைத் தாயகம் செயலாளர் இர. அருள், பசுமைத் தாயகம் நிர்வாகிகள் க. பொன்மலை, மு. ஜெயராமன், ராதாகிருஷ்ணன், சகாதேவன், முஸ்தபா, லோகநாதன், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்று விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
"காற்று மாசுபாடு ஒரு மிகப்பெரிய உயிர்க்கொல்லி. இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரங்களில் சென்னை மாநகரமும் ஒன்றாகும். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டி அளவை விட சுமார் 6 மடங்கு கூடுதலாக சென்னை நகரின் காற்று மாசுபட்டுள்ளது.
சென்னை மாநகரின் காற்று மாசுபாட்டிற்கு வாகனங்கள் எண்ணிக்கை அதிகமானது தான் முதன்மை காரணம். பத்தாண்டுகளுக்கு முன்பு 20 லட்சம் வாகனங்கள் ஓடிய சென்னை நகரில் தற்போது 54 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. சென்னையில் ஓடும் வாகனங்களில் பெரும்பாலானவை காற்று மாசுபாட்டு விதிகளை கடைபிடிப்பது இல்லை. அரசாங்கம் அதனை கண்காணிப்பதும் இல்லை. சென்னை நகரின் சாலைகளிலும் தெருக்களிலும் படிந்துள்ள புழுதி காற்று மாசுபாட்டிற்கு மிக முதன்மையான காரணம் ஆகும். பராமரிப்பு இல்லாத சாலை, சாலையோரம் கொட்டப்படும் குப்பை, கட்டட கழிவுகள், மற்றும் மின்சாரம், சாக்கடை என பல காரணங்களுக்காக தோண்டப்படும் குழிகள் ஆகியவற்றால் சென்னை நகரம் புழுதி நகரமாகிவிட்டது.
காற்று மாசுபாடு மிக மோசமான உடல்நலக்கேடுகளை ஏற்படுத்துகிறது. ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள், நுரையீரல் புற்றுநோய், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளிட்ட பல நோய்களை காற்று மாசுபாடு உருவாக்குகிறது. சென்னையின் காற்று மாசுபாடு பள்ளி செல்லும் குழந்தைகள் நுரையீரலை கடுமையாக பாதிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் சென்னை நகரின் குழந்தைகள் ஆஸ்துமா இரண்டு மடங்கு அதிகமாகியுள்ளது.
இந்த அவலநிலையை மாற்றிட, சென்னை நகரின் சாலைகளிலும் தெருக்களிலும் படிந்துள்ள புழுதியை அகற்றி, அவற்றை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.வாகனப்புகை சோதனைகளை முழு அளவில் மேற்கொண்டு - அனைத்து வாகனங்களும் மாசுக்கட்டுபாட்டு விதிகளுக்குள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். சென்னை நகர மக்களின் பயணத்தில பேருந்து, தொடர்வண்டி உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து பயணம் 47% ஆக உள்ளது. இதனை 80% ஆக அதிகரித்தால் மட்டுமே மாநகரை காப்பாற்ற முடியும். அதற்காக, தற்போது 3500 ஆக உள்ள MTC பேருந்துகள் எண்ணிக்கையை 10,000 பேருந்துகளாக அதிகரிக்க வேண்டும்" ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த பிரச்சாரம் நடத்தப்பட்டதாக பசுமைத் தாயகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!