உறவு, உடைமைகளை இழந்த மக்களுக்கு உணவு கூட வழங்காதது வெட்கக்கேடு என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...


கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. காவிரி பாசன மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் நிவாரணப் பணிகள் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் அளவுக்குக் கூட இல்லை.


தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களும் இணையும் பகுதியில் கடலோரப் பகுதிகளான தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிராம்பட்டினம், நாகை மாவட்டத்தின் வேதாரண்யம், உட்புறப் பகுதியான திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடி என முக்கோண வடிவிலான நிலப்பரப்பு தான் கஜா புயலால் மிகவும் மோசமாக சிதைக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதிகளையொட்டிய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் பிற பகுதிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளும் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. இந்த அளவுக்கு இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டுள்ள பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது உடனடியாக சாத்தியமாகும் செயல் அல்ல என்பதையும், அதற்கு சில நாட்கள் ஆகும் என்பதையும் நான் அறிவேன். இத்தகைய சூழலில் அரசு செய்ய வேண்டிய முதன்மையானப் பணி மக்களுக்கு ஆறுதல் கூறி, உணவு மற்றும் குடிநீர் தடையின்றி கிடைக்கச் செய்வதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களிடையே நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தச் செய்வது தான்.


பாதிக்கப்பட்ட மக்களிடையே நம்பிக்கை உணர்வை மட்டும் ஏற்படுத்தி விட்டால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். இந்தப் பணிகளுக்கு பொதுமக்களும் உதவியாக இருப்பர். ஆனால், மக்களிடையே நம்பிக்கை உணர்வை ஏற்படுத்துவதில் தமிழக அரசு படுதோல்வியடைந்து விட்டது. கஜா புயல் தாக்கி இன்றுடன் 3 நாட்கள் ஆகும் நிலையில் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தடையின்றி உணவு வழங்குவதைக் கூட ஆட்சியாளர்களால் உறுதி செய்ய முடியவில்லை. வேதாரண்யம், அதிராம்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உணவு மற்றும் குடிநீர் கூட கிடைக்காததால் அங்குள்ள மக்கள் தொடர் போராட்டங்களில்  ஈடுபட்டு வருகின்றனர். உறவுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளைக் கூட ஆட்சியாளர்களால் வழங்க முடியாதது வெட்கக்கேடு ஆகும்.


பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் குழுவினரும், அப்பணிகளை  மேற்பார்வையிட்டு வரும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் ஊரகப் பகுதிகளைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை என்பது தான் மிகப்பெரிய குற்றச்சாட்டு ஆகும். முதன்மைச் சாலைகளில் போக்குவரத்து  சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் கிராமப் பகுதிகளை இன்னும் அணுக முடியவில்லை. மின் வினியோகத்தை சீரமைக்கும் பணிகளில் எந்தவித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. இதனால் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் கோபமடைந்துள்ளனர். மக்களின் கோபத்தை தணிக்காமல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியாது என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.


சுனாமி நிவாரணப் பணிகளை செய்த மேற்கொண்ட அனுபவமுள்ள இ.ஆ.ப அதிகாரி இராதாகிருஷ்ணன், ஜவஹர் போன்றவர்கள் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை வழிநடத்தி வருகின்றனர். அவர்களுடைய பணிகளையும், களத்தில் உள்ள ஊழியர்களின் உழைப்பையும் குறை கூற முடியாது. ஆனால், பாதிப்புகளை சீரமைக்கும் அளவுக்கு போதிய தளவாடங்களும், பணியாளர்களும் வழங்கப்படாதது தான் மீட்புப் பணிகள் சுணங்குவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கஜா புயலின் தாக்கமும், பாதிப்பும் மிகவும் அதிகம் என்றாலும் கூட பாதிக்கப்பட்ட பரப்பு ஒப்பீட்டளவில் குறைவு தான் என்பதால் திட்டமிட்டு செய்தால் நிவாரணப் பணிகளை விரைவாகவும், எளிதாகவும் நிறைவேற்ற முடியும். ஆனால், திட்டமிடல் மற்றும் கூடுதல் பணியாளர்களை ஒதுக்குவதில் தமிழக அரசு தோற்றுவிட்டது.


மீட்புப் பணிகளே இந்த லட்சனத்தில் இருக்கும் போது பயிர் சேதங்கள், வீடுகள் போன்ற கட்டமைப்பு  பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. நிவாரணப் பணிகளில் உள்ள குறைகளை களைய அரசு முயல வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு குடிநீர் போன்றவை தடையின்றி கிடைக்க வகை செய்ய வேண்டும். ஏற்கனவே அனுப்பப்பட்டவர்கள் தவிர கூடுதலாக பணியாளர்கள் மற்றும் தளவாடங்களை அனுப்பி மீட்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.