சட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டது தொடர்பாக இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடை பெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்பொழுது மு.க. ஸ்டாலின் கூறியதாவது: 


சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.கள் வெளியேற்றப்பட்டது, தாக்குதலில் ஈடுபட்டதை கண்டிக்கிறோம். திமுகவின் சுயநலத்திற்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவில்லை. 


வருங்கால சந்ததியினர் நலமுடன் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும். தமிழகத்தில் நடக்கும் பினாமி ஆட்சியை அகற்ற வேண்டும். ஜெயலலிதா முதல்வராக இருக்க வேண்டும் என்பதற்காக தான் மக்கள் வாக்களித்தனர். இந்த பினாமி ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக அல்ல. ஒருபோதும் இந்த ஆட்சியை ஏற்க முடியாது. தமிழக அரசை இயக்கும் ரிமோட் பெங்களூரு சிறையில் இருப்பதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.


மாஃபியா கும்பலின் தவறுகளுக்கு எங்களை இழிவுபடுத்தாதீர் என மன்னார்குடி மக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள். எனவே, இனிமேல், மாஃபியா கும்பல், மாஃபியா கும்பல் என்றே அழைப்போம். மன்னார்குடி மாஃபியா என அழைத்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறோம் என்றார்.


மேலும் ஜெயலலிதா மறைவு குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இப்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றுள்ளார். அப்போது ஜெயலலிதா மறைவுக்கு காரணம் என்ன என்பதை கண்டறிய நீதி விசாரணைக்கு அவர் உத்தரவு இடவில்லை.


தற்போதிய அதிமுக ஆட்சி நீடித்து நிலைத்து நிற்கும் ஆட்சி கிடையாது. எங்களால் மட்டுமல்ல, அனைவராலும் தூக்கி எறியப்படும். திமுக அரசு அமைத்ததும் முதல் அறிவிப்பாக முன்னாள் முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதா மறைவுக்கான காரணம் என்ன என்பது குறித்த நீதி விசாரணை அமைக்கப்படும். அதை யாராலும் தடுக்க முடியாது. தடுக்கும் யோக்கியதை எவருக்கும் கிடையாது. ஆட்சியை கலைக்க வேண்டும் என்று திமுக போராட்டம் நடத்தவில்லை. கலைக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், ஜெயலலிதா மறைந்த உடனேயே, எங்கள் வேலையை ஆரம்பித்திருப்போம். ஆனால் கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க அண்ணாவும், கலைஞரும் எங்களுக்கு கற்றுத்தரவில்லை. மக்களை சந்தித்து, மக்கள் ஆதரவு மூலமாகவே திமுக ஆட்சிக்கு வரும்.