சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


சென்னை வண்ணாரபேட்டையில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வற்புறுத்தியதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.


இந்த சம்பவத்தின்போது போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு போராட்டம் நடத்திய இஸ்லாமிய அமைப்பினரின் தலைவர்களுடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார்.


இந்நிலையில் தற்போது இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல் திருவல்லிக்கேணி, பாரிமுனை, கிண்டி, ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட சென்னையின் பல இடங்களிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.