கிராமங்களுக்குள் படையெடுக்கும் ஈ கூட்டம்.! தொற்று பரவும் அச்சத்தில் மக்கள்
தாராபுரம் அருகே முறையான அனுமதியின்றி செயல்பட்டு வரும் முட்டைக் கோழிகள் உற்பத்தி பண்ணையால் ஈக்களின் தொல்லை அதிக அளவில் இருப்பதாக கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த நஞ்சுண்டாபுரம் காளிபாளையம் பகுதிகளில் தனியாருக்குச் சொந்தமான முட்டைக் கோழிகளை உற்பத்தி செய்யும் ஐந்துக்கு மேற்பட்ட மெகா கோழிப்பண்ணைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன, முறையான அரசு அனுமதி பெறாமல் பண்ணை ஒன்றுக்கு 5 ஆயிரம் கோழிகள் மட்டுமே வளர்க்க வேண்டும் என்ற சுற்றுச்சூழல் துறையின் கட்டுப்பாடுகளை மீறி பண்ணை ஒன்றுக்கு 50 ஆயிரம் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
அது மட்டுமின்றி, ஒரே இடத்தில் 6 கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருவதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கோழிப் பண்ணையின் கழிவுகளை அகற்ற வேண்டும் என்பதால் கோழிப் பண்ணையில் இருந்து உற்பத்தியாகும் லட்சக்கணக்கான ஈக்கள் கோழிப் பண்ணையை சுற்றிலும் உள்ள நஞ்சுண்டாபுரம் காளிபாளையம் புளியமரத்து பாளையம் அத்திமரத்தை பாளையம் திம்ம நாயக்கன் பாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் படை எடுத்து வருகிறது.
மக்கள் உண்ணும் உணவிலும், குடிக்கும் தண்ணீரிலும், நூற்றுக்கணக்கில் ஈக்கள் மொய்த்து பாடாய்படுத்தி வருவதாகவும் இப்பகுதியில் செயல்படும் அரசு ஆரம்பப் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் அந்த உணவை சாப்பிடவே முடியாத அளவுக்கு ஈக்களின் தொல்லையால் கடுமையாக அவதிப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பலர் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருவதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கும் நோய் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், கோழிப் பண்ணையின் உரிமையாளருக்கு அரசியல் கட்சி தலைவர்களுடைய ஆதரவு இருப்பதால், அதிகாரிகள் புகாரைப் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டி வருவதாகவும், இதன் காரணத்தால் பலர் கிராமத்தை காலி செய்து விட்டு வெளியூர்களுக்கு சென்று விட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரும், தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான திருமதி கயல்விழி செல்வராஜ் சம்பவ இடத்திற்கு வந்து பிரச்சனை குறித்து அப்பகுதி கிராம மக்களிடம் கேட்டு தெரிந்துகொண்டார். அதனை தொடர்ந்து பண்ணையின் அருகே செயல்பட்டு வரும் அரசு ஆரம்பப் பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சரை சூழ்ந்த மக்கள் தாங்கள் படும் அவஸ்தை குறித்து எடுத்துரைத்தனர். அதனை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.
மேலும் படிக்க | தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR