தூத்துக்குடியில் மழை வெள்ளம் வடியாததால் மக்கள் ஆத்திரம்: சாலை மறியல் போராட்டம்
15 நாட்களாகியும் மழை வெள்ளம் வடியாததால் மக்கள் ஆத்திரம்: தூத்துக்குடி-இராமேஸ்வரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில், 15 நாட்களாகியும் மழை வெள்ளம் வடியாததால் ஆத்திரம் அடைந்த மக்கள் தூத்துக்குடி-இராமேஸ்வரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் அதிக பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த மழையின் தாக்கம் இன்றுவரை ஓய்ந்தபாடில்லை. மாநகராட்சி பகுதிகளையும் கடந்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் மழை வெள்ளம் இன்னும் வடியாமலும், பாதிப்பு அதிகமாகவும் உள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ள நீரை உடனடியாக வெளியேற்ற கோரி தூத்துக்குடி-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஆரோக்கியபுரம் பகுதி அருகே பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், 'ஆரோக்கியபுரம், ஆ.சண்முகபுரம், புதிய முனுசாமி புரம், பவி ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களாக மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம். வீடுகளில் கொசு தொல்லை அதிகமாகி உள்ளது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் இருப்பதனால் அவர்களுக்கு இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ALSO READ:செல்போனில் கேம் விளையாடிதை கண்டித்ததால் மாணவர் எடுத்த விபரீத முடிவு!
வீடுகளை சுற்றிலும் இடுப்பளவுக்கு வெள்ளம் சூழ்ந்திருப்பதால் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியேற முடியாத நிலை உள்ளது. குடிநீருடன் கழிவுநீர் சேர்ந்து வருவதனால் தண்ணீர் அருந்த கூட எங்களுக்கு வழியில்லை. எங்களது பகுதியில் சூழ்ந்த வெள்ளத்தை வெளியேற்றக் கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் மாநகராட்சியின் புகார் எண்ணுக்கும் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்டதாகும். எனவே இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும், எங்கள் பகுதி கிராம பஞ்சாயத்து தலைவருக்கும் தகவல் தெரிவித்தோம்.
ஆனால் அவரும் இதுநாள் வரையில் இப்பகுதியில் வந்து மக்களின் நிலை குறித்து கேட்டுறியவில்லை. ஊருக்குள் ராட்சத மோட்டார்கள் வைத்து தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றுவது போல இப்பகுதியிலும் மோட்டார்களை பொருத்தி மழை வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு வந்ததுபோல பாதிப்பு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட்டிருந்தால் இவ்வளவு மெத்தனம் காட்டி இருப்பார்களா என்பது தெரியவில்லை. எனவே இனியும் எங்களை அலட்சியப்படுத்தாமல் குடியிருப்புகளை சூழ்ந்த வெளி நீரை வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
ALSO READ:காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளரிடம் ஆயுதத்தைக் காட்டி தப்பியோட்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil, டிவிட்டரில் @ZHindustanTamil மற்றும் டெலிகிராமில் t.me/ZeeNewsTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR