மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற பின்னர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு, வரும் 5-ஆம் தேதி திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பல்வேறு தரப்பினருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மாத வருவாய்ப் பிரிவினரின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது வருமானவரி செலுத்துவதற்கான வருவாய் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்பது தான். நடப்பாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த அப்போதைய பொறுப்பு நிதியமைச்சர் பியுஷ் கோயல், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு மட்டும் வருமானவரி விலக்கு அளித்தார். ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கும் கூடுதலாக வருமானம் ஈட்டுவோருக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. அதேபோல், வருமானவரி விகிதமும் மாற்றியமைக்கப்படவில்லை. அதுபற்றி அப்போது பியுஷ் கோயலிடம் கேட்டபோது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது வருமானவரி தொடர்பான மக்களின் அனைத்து நியாயமான எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.


மக்களவைத் தேர்தலுக்கு முன் நிதியமைச்சர் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. வருமானவரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்பது மிகவும் நியாயமான வாதம் ஆகும். ஆண்டுக்கு சராசரியாக 10% என்ற அளவுக்கு பணவீக்கம் அதிகரிக்கும் நிலையில், அதற்கேற்றவாறு மாத ஊதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு வருமானவரி விலக்கு உச்சவரம்பும் ஆண்டு தோறும் தானாக உயர வகை செய்யப்பட வேண்டும். 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி மாத ஊதியம்  உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருவாய் என்பது சர்வசாதாரணமாகிவிட்டது.  அதற்கேற்றவகையில் வருமானவரி விலக்கு உயர்த்தப்படாவிட்டால், மாத ஊதியதாரர்கள் தங்களின் ஊதியத்தில் பெரும்பகுதியை வருமானவரிக்காகவே செலுத்த வேண்டியிருக்கும். இது நியாயமானதல்ல.


மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்முறையாக பதவியேற்ற போது வருமானவரி விலக்குக்கான ஆண்டு வருவாய் உச்சவரம்பு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் கடந்த 5 ஆண்டுகளாக உயர்த்தப்படாத நிலையில், இம்முறை வருமான வரி விலக்கு வரம்பு குறைந்தது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும். அதேபோல், வருமானவரி விகிதமும் அடுத்தத்தடுத்த நிலைகளுக்கு உயர்த்தப்பட வேண்டும். உதாரணமாக இப்போது 2.5லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை 5% வரி வசூலிக்கப்படுகிறது. ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டால், அதன்பின் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கான வரியை இப்போதுள்ள 20 விழுக்காட்டிலிருந்து 10% அல்லது 5% ஆக குறைக்க அரசு முன்வர வேண்டும்.


அதேபோல், அரசு கவனம் செலுத்த வேண்டிய இன்னொரு முக்கிய அம்சம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையையும்,  அதற்கான ஊதியத்தையும் உயர்த்த வேண்டும் என்பது தான். தமிழ்நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக  உழவுத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு முற்றிலுமாக குறைந்து விட்டது. இந்நேரத்தில் அவர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பை வழங்கி வாழ்வாதாரம் அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும்.


அதுமட்டுமின்றி, மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி மீண்டும் வந்தால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கைவிடப்படும்; அதனால், கிராமப்புற ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்று மக்களவைத் தேர்தலின் போது திட்டமிட்டு பொய்யான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் ஒருசார்பாக வந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும். உண்மையில் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டதை விட, நரேந்திரமோடி ஆட்சியில் தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டது. இதை நிரூபிக்கும் வகையில் இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதுடன், தமிழ்நாடு உள்ளிட்ட வறட்சி பாதித்த மாநிலங்களில் இத்திட்டப்படி வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 150 ஆக அரசு உயர்த்த வேண்டும்.