தாமிரபரணி ஆற்றில் இருந்து பெப்சி, கோக் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க தடை இல்லை என மதுரை கிளை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகவன் என்பவர், பெப்சி, கோக் குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கக் கோரி மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார். 


மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- 


நெல்லை மாவட்டத்தில் பெப்சி, கோலா ஆலைகள் உள்ளிட்ட 25 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


தாமிரபரணி ஆற்றில் இருந்து நெல்லை மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக 12.5 கோடி லிட்டர் தண்ணீரும், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக 10 கோடி லிட்டர் தண்ணீரும் தினமும் எடுக்கப்படுகிறது. 


தினமும் குளிர்பான ஆலைகளுக்கு 47 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், குளிர்பானம் தயாரிக்கும் ஆலைகள் அனுமதி வழங்கப்பட்ட அளவை விட,   தாமிரபரணி ஆற்றில் இருந்து அதிக அளவில் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. 


இதனால், தாமிரபரணியை நம்பி உள்ள விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க  தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டது.


இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால், அந்த பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.