தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் புகழ் ஓங்குக என, கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் ட்விட் செய்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகின்றது. இதனையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பெரியாரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.


அந்தவகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் பெரியார் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். மேலும், பலரும், ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெரியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் மரியாதையையும் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் பெரியாரை நினைவுகூறும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது., "பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் பெரியார் தொடர்ந்து உந்து சக்தியாகத் திகழ்கிறார்! பெரியார் புகழ் ஓங்குக," என பதிவிட்டுள்ளார்.



கேரள முதல்வர் பினராயி விஜயன், அவ்வப்போது தமிழில் பதிவிட்டு வருகிறார். கேரள வெள்ளத்தின்போது தமிழக மக்களை உதவக் கோரியும், நிவாரண பொருட்களை அனுப்பியதற்காக மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் பல்வேறு சமயங்களில் பினராயி விஜயன் தமிழில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.