பெரியார் பல்கலை., பணியாளர் மீதான பழிவாங்கலை கைவிட வேண்டும்: PMK
54 தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள குறிப்பாணைகளை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்!!
54 தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள குறிப்பாணைகளை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்!!
இதுகுயர்த்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊதிய உயர்வு, பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் தொழிலாளர் சங்க நிர்வாகிகளை பணி நீக்கம் செய்யும் நோக்கத்துடன், அவர்களிடம் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. உரிமைக்காக போராட்டம் நடத்தும் பல்கலைக்கழக பணியாளர்களை பழிவாங்க பல்கலைக்கழகம் துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் தொகுப்பூதிய பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் ஆகியோரின் ஊதிய உயர்வு, வருங்கால வைப்பு நிதி, தொழிற்சங்க அங்கீகாரம், பல்கலைக்கழகத்திற்கு முழுநேர பதிவாளர் நியமனம் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு கட்ட அறவழிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகள் மிகவும் நியாயமானவையாகும்.
இந்த கோரிக்கைகள் குறித்து பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் குழந்தைவேலு தங்களை அழைத்து பேச வேண்டும் என்று தொழிலாளர் சங்கம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அதன்பின் இன்றுடன் சரியாக 100 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை தொழிலாளர்களை அழைத்து பேச்சு நடத்த துணைவேந்தர் முன்வரவில்லை. மாறாக, புதுப்புது வாய்ப்புகளை உருவாக்கி தொழிலாளர்களை பழிதீர்க்க அவர் முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த வரிசையில் இப்போது உங்களை ஏன் பணிநீக்கக்கூடாது? என்று விளக்கம் அளிக்கும்படி 54 தொழிலாளர்களுக்கு பொறுப்பு பதிவாளர் முனைவர் தங்கவேல் மூலமாக துணை வேந்தர் குழந்தைவேல் குறிப்பாணை (மெமோ) அனுப்பியுள்ளார் . இதற்காக குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் மிகவும் அற்பமானவை ஆகும்.
பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது 54 தொழிலாளர்களும் சற்று தொலைவில் அமர்ந்திருந்தனர் என்பது தான் குறிப்பாணையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஆகும். இதன் மூலம் உறுதியேற்பு விழாவை அவர்கள் அவமதித்து விட்டதாகக் குற்றஞ்சாட்டி, பணி நீக்கம் செய்வது தான் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நோக்கம் ஆகும். குறிப்பாணையில் கூறப்பட்டுள்ளவாறு எந்தவித அவமதிப்பிலும் ஈடுபடவில்லை என்று தொழிலாளர்கள் கூறிய போதிலும், அடித்தட்டு வகுப்பைச் சேர்ந்த அவர்களை துணைவேந்தர் பழிவாங்கத் துடிப்பது எத்தகைய மனநிலை என்று தெரியவில்லை.
பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் குழந்தைவேலு சிறந்த கல்வியாளர்; ஊழல் கறை படியாதவர்; எந்த வகையான சர்ச்சைகளிலும் சிக்காதவர். அப்படிப்பட்டவர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு வரும் போது விருப்பு வெறுப்பின்றி செயல்பட வேண்டும். மனதில் பழிவாங்கும் உணர்வை தேக்கி வைத்துக் கொண்டு, எத்தனை நல்ல குணங்களை வைத்திருந்தாலும் யாருக்கும் எந்த பயனும் இல்லை. தொழிலாளர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் அவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டவை ஆகும். உதாரணம் காட்ட வேண்டுமானால், தொகுப்பூதிய பணியாளர்களுக்கு கடந்த ஓராண்டாக மாதத்திற்கு 22 நாட்கள் மட்டும் தான் ஊதியம் வழங்கப்படுகிறது; இதை மாற்றி ஏற்கனவே இருந்ததைப் போல 30 நாட்களுக்கு ஊதியம் வழங்கும்படி கோருகிறார்கள். இது மிகவும் நியாயமானது. இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக, கோரிக்கையை முன்வைத்துப் போராடுபவர்கள் மீது அபாண்டமான பழிகளை சுமத்தி பணிநீக்கம் செய்வது எந்தவகையிலும் அறமல்ல.
எனவே, 54 தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள குறிப்பாணைகளை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும். தொழிலாளர்கள் மீதான பழிவாங்கும் போக்கை கைவிட்டு, பணியாளர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பெரியார் பல்கலைக்கழகம் முன்வர வேண்டும்.