பாஜகவினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... 250 பேரிடம் விசாரணை - டிஜிபி சைலேந்திர பாபு
பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் கடந்த 22-ந் தேதி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது தமிழ்நாட்டில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இக்கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 1410 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தஞ்சாவூரில் பஸ் மீது கல்வீசி சேதம் விளைவித்த அரித்திரி, சலீம், சிராஜீதின் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை சில அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்களை குறிவைத்து வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இச்சம்பவங்கள் தொடர்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க | பாஜகவினர் மீது தாக்குதல் - மத்திய உள்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்
இதுவரை 250 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 100 நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களது இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை மாநகரில் அதிவிரைவுப்படையின் இரண்டு பிரிவுகள், மாநில கமாண்டோ படை இரண்டு பிரிவுகள், சிறப்பு அதிரடிப்படை இரண்டு பிரிவுகள் என கூடுதலாக 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர் தாமரைக்கண்ணன் அங்கு முகாமிட்டுள்ளார்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ