கோவை: பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு; பதற்றமான சூழல்: காவல்துறை தீவிர விசாரணை
கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் எதிரொலியாக 2000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்தும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா குறித்தும் இழிவாகப் பேசியதாக கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி நேற்று முன்தினம் 3 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன் தினம் பீளமேடு பகுதியில் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு உருவபொம்மை எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதில் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த மூவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், டெல்லியில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | தேச விடுதலையில் தமிழ் மக்களின் பங்கு அளப்பறியது: ஜே.பி.நட்டா
கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ் இஸ்மாயில் அழைத்து செய்யப்பட்டுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் கரும்பு கடை பகுதியில் தடுப்புகளை தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இந்த சம்பவங்களை தொடர்ந்து நேற்று மாலை கணபதியில் இருந்து கோவைப்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில் பேருந்தில் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
அதேபோன்று, காந்திபுரத்தில் இருந்து நரசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, டவுன்ஹால் பகுதியை கடந்து சென்ற போது பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கல் வீசியதில் அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் சூழ்நிலையில், கோவை வி.கே.கே மேனன் சாலையில் அமைந்துள்ள கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி எறிந்தனர்.
அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போன்று கோவை ஒப்பணக்காரர் வீதி பகுதியில் செயல்பட்டு வரும் மாருதி டெக்ஸ்டைல்ஸ் துணிக்கடையின் மீதும் மர்ம நபர்கள் திரியுடன் மண்ணெண்ணெய் குண்டை வீசி சென்றனர். இது தொடர்பான தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த வெரைட்டி ஹால் ரோடு போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் கோவை மாநகர் முழுவதும் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக கோவையில் விடுதிகளில் தங்கி உள்ளவர்களின் பின்னணி குறித்து விசாரிக்கப்படுகிறது. மேலும், கோவை மாநகர் முழுவதும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவித்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கண்காணிப்பு மற்றும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.
மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் கடன் சுமை குறைந்துள்ளது - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நம்பிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ