தமிழகத்தில் இன்று முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவக்கம்
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று முதல் (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று முதல் (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
2019-20-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கி வருகிற 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7 ஆயிரத்து 276 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவ-மாணவிகள் இந்த பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்.
பழைய பாடத்திட்டத்தில் 10 ஆயிரத்து 683 தனித் தேர்வர்களும், புதிய நடைமுறையில் பழைய பாடத்திட்டத்தில் 5 ஆயிரத்து 828 தனித்தேர்வர்களும், புதிய பாடத்திட்டத்தில் 2 ஆயிரத்து 655 நேரடி தனித்தேர்வர்களும் என மொத்தம் 19 ஆயிரத்து 166 தனித்தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள் 4 லட்சத்து 41 ஆயிரத்து 612 பேர். மாணவிகள் 3 லட்சத்து 74 ஆயிரத்து 747 பேர். தனித்தேர்வர்களில் 6,581 பெண்களும் 12,583 ஆண்களும் மற்றும் 2 திருநங்கைகளும் தேர்வு எழுத உள்ளனர்.
சென்னையில் 410 பள்ளிகளில் இருந்து 160 தேர்வு மையங்களில் 25,547 மாணவர்கள், 21,717 மாணவிகள் என மொத்தம் 47 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதுகிறார்கள். புதுச்சேரியில் 149 பள்ளிகளில் இருந்து 40 தேர்வு மையங்களில் மொத்தம் 14 ஆயிரத்து 958 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் உள்ள 62 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகிறார்கள்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று முதல் (திங்கட்கிழமை) தொடங்குகிறது. தேர்வுகள் காலை 10 மணிக்கு துவங்கி பிற்பகல் 1.15 வரை நடைபெறும். வினாத்தாளை வாசிக்க கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 24 ஆம் தேதி ரிசல்ட் வெளியாகும்.