ஆபத்தான ஈனுலை திட்டம்...? திறந்துவைக்கும் பிரதமர் - முதல்வர் புறக்கணிப்பு ஏன்?
PM Modi TN Visit: கல்பாக்கத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் ஈனுலை திறப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்ளாததன் பின்னணி குறித்து இதில் காணலாம்.
Kalpakkam Fast Breeder Reactor: பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். மக்களவை தேர்தல் வருவதை முன்னிட்டு தொடர் பிரச்சார பயணத்தில் இருக்கும் பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை தொடக்கிவைக்கிறார்.
கல்பாக்கத்தில் பிரதமர்
கடந்த வாரம், திருப்பூர் பல்லடத்தில் 'என் மண், என் மக்கள்' நடைபயணத்தின் இறுதிவிழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி (PM Modi TN Visit), அப்படியே மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு சென்று சில நலத்திட்டங்களை திறந்துவைத்து, பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார். அந்த வகையில், இன்று கல்பாக்கத்தில் ஈனுலை திட்டத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி, மாலை சென்னை நந்தனத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
இந்நிலையில், கல்பாக்கம் ஈனுலை திட்டத்திற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. ஆளும் திமுக தரப்பு கல்பாக்கம் ஈனுலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமரின் நிகழ்வையும் புறக்கணித்துள்ளது. மேலும், பல எதிர்க்கட்சிகள் தொடங்கி பூவுலகின் நண்பர்கள் போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகள் வரை இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | அதிமுகவுக்கு ஆதரவாக பேசிய கனிமொழி - பாஜக சீன்லையே இல்ல
ஈனுலைக்கு கடும் எதிர்ப்பு
குறிப்பாக, மதிமுக பொதுசெயலாளரான வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் இன்று திறக்க இருக்கும் கல்பாக்கம் ஈனுலை திட்டம் குறித்தும், அதன் அபாயம் குறித்தும் முழுமையாக விளக்கியிருந்தார். அந்த அறிக்கையில்,"செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் உள்ள அணுஉலை வளாகத்தில் பாவினி எனும் பொதுத்துறை நிறுவனத்தால் கடந்த 2003ஆம் ஆண்டு இருந்து 500 மெகாவாட் திறன் கொண்ட ஒரு மாதிரி அதிவேக ஈனுலை கட்டப்பட்டு வருகிறது.
இந்த அதிவேக ஈனுலையின் முக்கியத்துவமும் நிலைக்கான (attaining criticality) எரிபொருள் நிரப்பும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 4ஆம் தேதி (அதாவது இன்று) தொடங்கிவைக்க இருப்பதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈனுலை என்றால் என்ன?
ஆனால், இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்தும், ஈனுலை அமைத்து வரும் பாவினி நிர்வாகத்திடமிருந்தும் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாகவும், ஆபத்தான புளூட்டோனியத்தை எரிபொருளாகவும் கொண்ட இத்தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது என்பதால் உலக நாடுகளே இந்த ஈனுலைகளைக் கைவிட்டு விட்டன.
2004ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட இத்திட்டம் 2010ஆம் ஆண்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், இதன் தொழில்நுட்பமானது உலக நாடுகள் பலவும் பயன்படுத்தி கைகூடாத காரணத்தால் கைவிடப்பட்டுவிட்டவையாகும். இதன் காரணமாக இத்திட்டம் தொடர்ந்து தாமதமாகி வந்த நிலையில், இப்போது 2024ஆம் ஆண்டு டிசம்பருக்குள் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. தாமதமானதால் இத்திட்டத்திற்கான செலவு ரூ. 3490 கோடியில் இருந்து இரண்டு மடங்கு அதிகரித்து மார்ச் 2023 கணக்கின்படி ரூ. 7700 கோடியாக உயர்ந்துள்ளதாக WNISR அறிக்கை கூறுகிறது.
மேலும் படிக்க | பிரதமர் இந்த காரணத்திற்காக தான் தமிழகம் வருகிறார் - முதல்வர் ஸ்டாலின்!
மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி...
பன்னாட்டு அணுசக்தி முகமையின் கட்டுப்பாடுகள் எதுவும் இந்த ஈனுலைகளுக்குக் கிடையாது என்பதால், இந்த உலைகளில் இருந்து வெளியாகும் கழிவுகள் அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படலாம் என்கிற சந்தேகமும் எழுகிறது. கூடங்குளம் அணுஉலையில் இருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை அங்கேயே வைக்க மாட்டோம் என ஒன்றிய அரசு தொடக்கத்தில் கூறி வந்தது. ஆனால், தற்போது அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே சேமித்து வைப்பதற்கான கட்டமைப்புகளை மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது" மத்திய பாஜக அரசு மீது வைகோ கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
தொடர்ந்து, "பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து அணுஉலைகளுக்கும், அணுக்கழிவு மையங்களுக்கும் எதிர்ப்பு வந்தால் அத்திட்டங்களைக் கைவிடும் ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டில் தொடர்ந்து இத்தகைய நாசகாரத் திட்டங்களைக் கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு வெள்ள பாதிப்பிற்கு நிதி கொடுங்கள், எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டித் தாருங்கள் என கோரிக்கை வைத்தால், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத ஒன்றிய பாஜக அரசு, நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், அணுஉலை, ஈனுலை என தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தானத் திட்டங்களையே திணிக்க நினைக்கிறது.
முதல்வர் பங்கேற்காதது ஏன்?
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கும், வட தமிழ்நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே ஒன்றிய பாஜக அரசு உடனடியாக இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு முனைந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இதுகுறித்து இன்று பேசுகையில்,"கல்பாக்கத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்கும் ஈனுலை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஏற்கவில்லை. அதனால்தான், முதல்வர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. கதிர்வீச்சு காரணமாக, கல்பாக்கத்தை சுற்றியிருக்கும் மக்கள் கேன்சரால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். zeenews.india.com/tamil/tamil-nadu/rs-bharathi-most-arrests-in-indian-drug-trade-linked-to-bjp-members-491851
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மகாபலிபுரத்தில் மீன் சாப்பிடுவதில்லை. இன்று, அதைவிட ஆபத்தான திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டை எல்லா வகையிலும் அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார் பிரதமர்" என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ