112 அடி உயர ஆதியோகி சிலையை மோடி திறந்து வைத்தார்
கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிவனின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று மகா சிவராத்திரி விழாவையொட்டி பிரமாண்டமான இந்த சிலையின் திறப்பு விழா நடைபெற்று.
கோவை: கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிவனின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று மகா சிவராத்திரி விழாவையொட்டி பிரமாண்டமான இந்த சிலையின் திறப்பு விழா நடைபெற்று.
இந்த விழாவில் கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்கவும், சிவராத்திரி விழாவை தொடங்கி வைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கோவை வந்தார்.
அங்கு நடைபெற்ற பஞ்சபூத ஆராதனை நிகழ்ச்சியில் பிரதமர் தீப தட்டு ஏந்தி வந்தார். பின்னர் தியான லிங்கத்தை மலர்களை தூவி வணங்கினார். பின்னர் தியான லிங்கத்தை சத்குரு ஜக்கிவாசுதேவுடன் சேர்ந்து மோடி சுற்றி வந்தார்.
அங்கிருந்து கார் மூலம் ஆதியோகி சிலை அமைந்துள்ள மேடைபகுதிக்கு பிரதமர் அழைத்து வரப்பட்டார்.
சிவன் சிலைக்கு புனித நீரை ஊற்றினார். அதன்பின்னர் இரவு 7.10 மணியளவில் 112 அடி உயர ஆதியோகி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது சிவராத்திரிக்கான மகாயோக யக்னா தீப்பந்தத்தை ஜக்கி வாசுதேவ், பிரதமரிடம் கொடுத்தார். கொப்பரையில் மகா தீபத்தை பிரதமர் ஏற்றி வைத்தார். திறப்பு விழாவின்போது ஜக்கிவாசுதேவ் உடுக்கை அடித்தார். அப்போது மோடியும் ஆர்வத்துடன் உடுக்கையை வாங்கி சிறிதுநேரம் அடித்தார்.
ஆதியோகி சிவனின் முகத்தோற்ற சிலை திறப்பு விழாவில் கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதுபோன்று அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பக்தர்கள் பலரும் நேற்று முன்தினம் மாலையிலேயே ஈஷா யோகா மையத்துக்கு வந்தனர்.
ஆதியோகி சிலை திறப்பையொட்டியும், சிவராத்திரி விழாவுக்காகவும் ஈஷா யோகா மையத்தில் 1 லட்சத்துக்கும் மேலானவர்கள் வருகை தந்து இருந்தனர்.
ஆதியோகி சிலை திறப்பு விழா முடிந்த பின்னர் தொடர்ந்து பக்தி பாடல்கள் பாடப்பட்டதுடன், பல்வேறு வாத்திய கருவிகளுடன் இசையும் இசைக்கப்பட்டது.
பின்னர் அங்கு பேசிய பிரதமர் மோடி:-
உலக அமைதிக்கு யோகா ஒன்றே தீர்வாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இந்தியாவில் பல விழாக்கள் இருந்தாலும் மகா சிவராத்திரி மட்டுமே மிகப் பெரிய விழா. தேவர்கள் பலர் இருந்தாலும் மகா தேவர் என்பவர் ஒருவரே. அதைப் போலவே, மந்திரங்கள் பல இருந்தாலும் மகா மிருத்யுஞ்ஜய மந்திரம் என்பது ஒன்றேதான் உள்ளது.
சிவனைக் குறிப்பதான மகா சிவராத்திரி, இருளையும் அநீதியையும் போக்கக் கூடியது. இந்நாளில் இரவு முழுவதும் சிவனைக் கொண்டாடும்போது அநீதிகளை எதிர்த்துப் போராடக் கூடிய வல்லமை நமக்கு கிடைக்கிறது.
கோடிக்கணக்கான இந்தியர்களைப் போலவே மகா சிவராத்திரியில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாபெரும் கடலில் ஒரு துளியாக நாம் இருக்கிறோம். பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற பக்தர்கள் வாழ்ந்து மறைந்துள்ளனர். ஆனால், பரம்பொருள் எப்போதும் போலவே இப்போதும் மாறாமல் உள்ளது.
இயற்கையையும், சுற்றுச்சூழலையும் காப்பதே சிவனுடைய பாரம்பரியமாகும்.
"ஏகம் சத் விப்ராஹா பஹுதா வதந்தி' என்று நமது முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். யோகக் கலை என்பது உலகத்துக்கு நாம் கொடுத்த நன்கொடையாகும். யோகா பல பரிணாமங்களைக் கடந்து வந்துள்ளது. உடல் ஆரோக்கியத்துக்கு யோகப் பயிற்சி முக்கியமானது.
மனதின் ஆலயம் உடல் என்றால், அந்த ஆலயத்தை அழகுறச் செய்வது யோகாதான். அதனால் தான், உடல் ஆரோக்கியத்துக்கு பாஸ்போர்ட் யோகா என்று நான் கூறுகிறேன்.
நமது மனது எப்போதும் புதிய எண்ணங்களை வரவேற்பதாக இருக்க வேண்டும். ஆனால், எதிர்பாராதவிதமாக நம்மில் சிலர், பழைமையானது என்பதற்காகவே நமது கொள்கைகளை மறுத்து வருகின்றனர். இது மிகவும் ஆபத்தானது.
சத்குரு ஜக்கி வாசுதேவ் பல சாதாரண மனிதர்களையும் யோகிகளாக மாற்றியுள்ளார். கூலி வேலைக்குச் செல்பவர்கள் கூட தங்களது அன்றாட வாழ்க்கையில் யோகாவைப் பின்பற்றுவதற்கு சத்குரு ஒரு காரணமாக அமைந்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.