பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரை வந்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் செயல்படும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை போன்று தென்னிந்தியாவில் மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக தமிழகத்தை மத்திய அரசு தேர்வு செய்தது. அந்தவகையில் மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது.


இதற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு, ரூ.1,264 கோடி நிதியும் ஒதுக்கி உள்ளது. இதனைத்தொடர்ந்து ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பணிகள் தொடங்கின. இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மதுரையில் இன்று நடக்கிறது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.


இன்று நடைபெற உள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். மேலும் தமிழக கவர்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பலர் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.


இந்த விழாவை தொடர்ந்து, அதே மைதானத்தில் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மற்றொரு மேடைக்கு நரேந்திர மோடி சென்று, பாஜக பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.


இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பகல் 11.15 மணிக்கு, மதுரை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. மதுரை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மோடி கொச்சிக்கு செல்கிறார்.


பிரதமர் வருகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழா நடைபெறும் பகுதியில் பார்வையாளர்கள் மற்றும் கட்சியினர் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுப்பப்படுவார்கள். நிகழ்ச்சி நடைபெறும் மண்டேலாநகர், மதுரை விமான நிலையம் அருகே இருப்பதால் பிரதமர் நிகழ்ச்சி முடியும் வரை 2 மணி நேரம் மதுரையில் விமானம் பறக்க தடை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மண்டேலா நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.