நிலக்கரி இறக்குமதி செய்திதல் ஊழல்; விசாரணை ஆணையம் தேவை!
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...
"தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தனியார் நிறுவனங்கள் மூலம் நிலக்கரி இறக்குமதி செய்ததில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருப்பது அம்பலமாகியிருக்கிறது. ஒன்றரை நாளுக்கான நிலக்கரியை இறக்குமதி செய்ததில் மட்டும் ரூ.33 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனல் மின்நிலையங்களில் நிலக்கரி இருப்பு மிகவும் குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி, வெளிநாடுகளில் இருந்து விதிகளை தளர்த்தி நிலக்கரி இறக்குமதி செய்ததில் தான் இந்த ஊழல் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு அனல் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி மத்திய பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவிடமிருந்து ஒரு டன் ரூ.2,000 என்ற விலையில் வாங்கப் படுகிறது. ஆனால், இப்போது ஒரு டன் ரூ.5,098 என்ற விலையில் யாசின் இம்பெக்ஸ் நிறுவனத்திடம் இருந்தும், ரூ.5008 என்ற விலையில் அதானி நிறுவனத்திடமிருந்தும், ரூ.4,936 என்ற விலையில் ஸ்ரீ ராயலசீமா நிறுவனத்திடமிருந்தும் மொத்தம் 1.10 லட்சம் டன் நிலக்கரியை மின்சார வாரியம் கொள்முதல் செய்துள்ளது. இது வழக்கமாக வாங்கும் விலையை விட 150% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து நிலக்கரி வாங்குவதாக இருந்தால் முறைப்படி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, குறைந்த விலையை குறிப்பிடும் நிறுவனத்திடமிருந்து தான் நிலக்கரி கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஆனால், தமிழகத்திலுள்ள அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு மிகவும் குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி, டெண்டர் நடைமுறையிலிருந்து அக்டோபர் ஒன்றாம் தேதியன்று விலக்கு பெறப்பட்டு தனியாரிடமிருந்து அதிகவிலைக்கு நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
அனல் மின் நிலையங்களுக்கு அவசரமாக நிலக்கரி தேவைப்பட்டதால் தான் விதிகளை தளர்த்தி, ஒப்பந்தப்புள்ளி கோராமல் அதிக விலைக்கு நிலக்கரி வாங்கப்பட்டதாக அரசுத் தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது. இதற்கு வலிமையான காரணங்கள் உள்ளன. தமிழகத்தில் நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பியுஷ் கோயலை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து அன்று முதல் தமிழகத்துக்கு தினமும் 72,000 டன் நிலக்கரியை மத்திய அரசு அனுப்பத் தொடங்கியது. இது தமிழகத்திற்கான ஒருநாள் அதிகபட்சத் தேவை ஆகும். காற்றாலை மின்னுற்பத்தி அதிகரித்ததால் பல நாட்கள் தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அனல்மின்நிலையப் பிரிவுகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. அதனால் தமிழக அனல் மின்நிலையங்களில் நிலக்கரி தேவைக்கும் அதிகமாகவே இருந்திருக்கும்.
அதுமட்டுமின்றி, தமிழக மின் நிலையங்களுக்கு 20 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டன. இதனால் தமிழக அனல்மின் நிலையங்களுக்கு தேவைக்கும் அதிகமாகவே நிலக்கரி இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் ஒன்றாம் தேதி ஒப்பந்தப்புள்ளி நடைமுறையிலிருந்து விலக்கு அளித்து தனியார் நிறுவனங்களிடமிருந்து அவசர, அவசரமாக அதிக விலைக்கு நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டது ஏன்? இவ்வளவு அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி மின்நிலையங்களுக்கு வந்து சேர்ந்ததா? ஊழல் செய்ய வேண்டும் என்பதைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்? இதன் பின்னணி சதி பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
நிலக்கரி இறக்குமதியில் மட்டுமின்றி நீண்டகால, குறுகியக் கால மற்றும் மத்தியக் கால ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதிலும் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது என்பதை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் ஊழல் நடக்காத துறையே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து துறைகளிலும் ஊழல்கள் மலிந்து கிடக்கின்றன. இது குறித்து ஆதாரங்களுடன் பலமுறை புகார் அளித்தும் அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, நிலக்கரி மற்றும் மின்சாரம் கொள்முதல் உடபட பினாமி அரசின் அனைத்துத் துறை ஊழல் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்." என தெரிவித்துள்ளார்.