உயர்சாதி பணக்காரர்களுக்கும் 10% இடஒதுக்கீடு நீட்டிக்க முயற்சி நடைபெறுகிறதா என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு கேள்வி எழுப்பியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுகையில்., "புதுச்சேரியில் உள்ள புதுவை மத்திய பல்கலைக்கழகத்திற்கு 44 பேராசிரியர்கள் உள்பட மொத்தம் 179 ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருக்கின்றன. அதில் உயர்வகுப்பு ஏழைகள் என்ற பெயரில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வாய்ப்பே இல்லாத பேராசிரியர் உள்ளிட்ட பதவிகளுக்கும் இந்த இடஒதுக்கீடு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.


புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நோக்குடன்  44 பேராசிரியர்கள், 68 இணைப் பேராசிரியர்கள் மற்றும் 67 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நியமிப்பதற்காக நாடு முழுவதுமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மத்திய அரசால் அண்மையில் அறிவிக்கப்பட்ட உயர்வகுப்பு ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீட்டையும் சேர்த்து 59.50% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ள பல்கலைக்கழகம், ஒவ்வொரு பணியிடத்திற்குமான ஒதுக்கீட்டையும் அறிவித்துள்ளது. பேராசிரியர் பணிகளில் 4 இடங்களும், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணிகளில் தலா 6 இடங்களும்  உயர்வகுப்பு ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் ஆள்சேர்க்கை அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.


உதவிப் பேராசிரியர் பணி என்பது நுழைவுநிலைப் பணியாகும். அப்பணிக்கு அனுபவம் கட்டாயமில்லை. அப்பணியில் சேருபவர் அதற்கு முன் வேறு பணியில் இருந்து ஊதியம் பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால், உதவி பேராசிரியர் பணிக்கு உயர்சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு வழங்குவதில் தவறில்லை. ஆனால், இணைப்பேராசிரியர், பேராசிரியர் பணிகள் அப்படிப்பட்டவை அல்ல. பேராசிரியர்   பணிக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச தகுதி இணைப் பேராசிரியர் நிலையில் இருப்பதுடன், 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய தகுதிகளை பெற்றிருப்பவர்களின் குறைந்தபட்ச ஆண்டு வருமானம் ரூ.18 லட்சமாக இருக்கும். அதேபோல், இணைப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்ய குறைந்தபட்ச தகுதி உதவிப் பேராசிரியராக 8 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்பதாகும். உதவிப் பேராசிரியர் பணிக்கு தொடக்கநிலை ஊதியம் ரூ.71,000 முதல் ரூ.75,000 வரையாகும். 8 ஆண்டுகள் அனுபவம் பெற்ற நிலையில், ஓர் உதவிப் பேராசிரியரின் மாத ஊதியம் ரூ. 1 லட்சத்தை தாண்டியிருக்கும். அவ்வாறு இருக்கும் போது அந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களின் குறைந்தபட்ச ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சத்திற்கும் கூடுதலாகத் தான் இருக்கும்.


உயர்சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் பயனடைய விரும்புபவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆனால், பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களின் குறைந்தபட்ச ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை இருக்கும் என்பதால் அவர்கள் உயர்சாதி ஏழைகளாக இருக்க வாய்ப்பில்லை. பேராசிரியர், இணைப் பேராசிரியர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் எவருக்குமே உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டைப் பெறும் தகுதி இருக்காது எனும் நிலையில், அப்பணிகளுக்கு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருப்பது முறைகேடுகள் நடக்க வழி வகுக்கும் என்ற அச்சம் எழுகிறது.


பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணிகளுக்கு உயர்சாதி ஏழைகள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு இருப்பதால், அந்தப் பிரிவைச் சார்ந்தவர்கள் எவரேனும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு  ரூ.8 லட்சத்திற்கும் குறைவான ஊதியத்தில் பணிபுரிவதாக பொய்யான சான்றிதழ் கொடுத்து பணியில் சேர வாய்ப்புள்ளது. அப்படியானால் அது உயர்சாதி பணக்காரர்களுக்கான இட ஒதுக்கீடாக மாறிவிடும். அதை அனுமதித்தால் அதை விட மோசமான விதிமீறலும், சமூகநீதிக் கொலையும் இருக்க முடியாது. 


புதுவை மத்தியப் பல்கலைக்கழகப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் கல்வித் தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட அனைத்தும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு  உட்பட்டு இருக்க வேண்டும் என்று ஆள்சேர்ப்பு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறுபவர்களே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். அவர்கள் எவருமே உயர்சாதி ஏழைகளுக்கான வரையறைகளுக்குள் பொருந்த மாட்டார்கள்.


இத்தகைய சூழலில், பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள உயர்சாதி ஏழைகள் இடஒதுக்கீடு நிச்சயம் தவறாகவே பயன்படுத்தப்படும். உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு என்பதே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனும் போது, ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வருவாய் ஈட்டுவோருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க நடக்க இந்த முயற்சியை அனுமதிக்கவே முடியாது. எனவே, இதில் மத்திய அரசு தலையிட்டு பல்கலைக்கழக பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் கூடுதலாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடைய அனைத்து பணிகளுக்கும் உயர்சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.