பள்ளிக்கல்வி நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும் -ராமதாஸ்!
![பள்ளிக்கல்வி நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும் -ராமதாஸ்! பள்ளிக்கல்வி நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும் -ராமதாஸ்!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2018/08/28/134736-ramadoss.jpg?itok=hZvzo9ZG)
தமிழகத்தின் பள்ளிக்கல்வி நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்!
தமிழகத்தின் பள்ளிக்கல்வி நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்!
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...
"தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், அப்பள்ளிகளை தத்தெடுக்கவும், நிதியுதவி வழங்கவும் முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கேட்டுக் கொண்டிருக்கிறார். பள்ளிச்சூழலை மேம்படுத்த இது சிறப்பான ஏற்பாடு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பள்ளிக்கல்வி நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்காமல் இத்தகைய உதவிகளைப் பெறுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமாக உள்ளன. பல பள்ளிகளில் சுற்றுச்சுவர், கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வகங்களும், நூலகங்களும் மிகவும் பரிதாபமான நிலைமையில் உள்ளன. சில பள்ளிகளில் அவற்றின் தலைமை ஆசிரியரும், பிற ஆசிரியர்களும் தங்களின் சொந்த முயற்சியில் நிதி திரட்டி பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மேம்படுத்தியுள்ளனர். அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது. அதைப் பின்பற்றித் தான் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக தொழில் நிறுவனங்களும், முன்னாள் மாணவர்களும் நிதி உதவி வழங்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியிருக்கிறார். அமைச்சரின் நோக்கம் நல்லதாக இருக்கலாம்; முன்னாள் மாணவர்களின் உதவியுடன் கல்வி நிலையங்களை மேம்படுத்துவது உலகம் முழுவதும் செயல்பாட்டில் இருக்கும் வெற்றிகரமான தத்துவமாக இருக்கலாம்; ஆனால், தமிழகக் கல்வித்துறை இப்போதுள்ள நிலையில் இது பயனளிக்குமா? என்பது தான் வினா.
ஓட்டை வாளியை வைத்துக் கொண்டு நீர் இறைத்தால் அது தண்ணீருக்குத் தான் கேடாகுமே தவிர தாவரங்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது. அதைபோலத் தான் தமிழகத்தின் கல்வி நிர்வாகத்தில் ஏராளமான குறைபாடுகளை வைத்துக் கொண்டு, தொழிலதிபர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் நிதியுதவி பெறுவதும் பயன்தராது. பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பெறப்படும் நிதி விழலுக்கு இறைத்த நீராக பயனற்ற வகையில் வீணடிக்கப்படுமே தவிர, கல்வி வளர்ச்சிக்கு பயன்படாது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி கற்பிப்பதற்காக அதிகம் செலவிடப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் சராசரியாக ரூ.35ஆயிரத்தை அரசு செலவழிக்கிறது. ஒன்றாம் வகுப்புக்கு ரூ.25155, இரண்டாம் வகுப்புக்கு ரூ.25,184,மூன்றாம் வகுப்புக்கு ரூ.25,383, நான்காம் வகுப்புக்கு ரூ.25,392, ஐந்தாம் வகுப்புக்கு ரூ.25,425 ஆறாம் வகுப்புக்கு ரூ.32,897 ஏழாம் வகுப்புக்கு ரூ.33,066 எட்டாம் வகுப்புக்கு ரூ.33,146 வீதம் தமிழக அரசு செலவழிக்கிறது. ஒன்பது முதல் 12&ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான செலவுத் தொகை இன்னும் கூடுதலாக இருக்கும். எனினும் இதனால் என்ன பயன்?
ஒவ்வொரு மாணவரின் கல்விக்காகவும் தமிழக அரசு செலவிடும் தொகை தமிழகத்திலுள்ள சில தரமான பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட அதிகமாகும். மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு ரூ.27,150 வீதம் தான் செலவிடப்படுகிறது. ஆனால், தனியார் பள்ளிகளிலும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் கிடைக்கும் தரமான கல்வி தமிழக அரசு பள்ளிகளில் கிடைக்காதது ஏன்? ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் ஒவ்வொரு அரசு பள்ளி மாணவருக்கும் செலவிடப்படும் தொகை தமிழக அரசுப் பள்ளிகளில் செலவிடப்படும் தொகையை விடக் குறைவு. ஆனால், அந்தப் பள்ளிகளின் தரம் அதிகமாக உள்ளது. அப்படியானால் தமிழகத்தில் மாணவர்களின் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி எங்கோ வீணாகிறது என்று தானே பொருள்? இதை தமிழக அரசு எவ்வாறு சரி செய்யப் போகிறது?
தமிழகத்தில் மொத்தம் 6029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மையக்கணினி மூலம் அனைத்து வகுப்பறைகளில் பாடம் நடத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று 26.08.2011 அன்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி 2013-ஆம் ஆண்டில் 4340 பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. ஆனால், எதிர்பார்த்த அளவு கையூட்டு கிடைக்காததால் யாருக்கும் ஒப்பந்தப்புள்ளிகள் வழங்கப்படவில்லை. இதேதிட்டத்தை புதிய திட்டம் போன்று கடந்த 19.06.2017 அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஆனால், அதன்பின் ஓராண்டுக்கு மேலாகியும் அத்திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அதற்கும் காரணம் ஊழல் தான்; அதைத் தவிர வேறில்லை.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 2012-17 காலத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.8500 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால், அதற்கான திட்ட வரைவை தமிழக அரசு அனுப்பாததால் நிதியின் அளவை ரூ.4,800 கோடியாக குறைத்து விட்டது. இதனால் ரூ.3,700 கோடி வீணாகி விட்டது. அதுமட்டுமின்றி, இடைநிலைக் கல்வித்திட்டத்தின்படி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.4,400 கோடியை தமிழக அரசு பயன்படுத்தவில்லை என மத்திய அரசு குற்றஞ்சாற்றியுள்ளது.
ஒதுக்கப்பட்ட நிதியை செலவழிக்க முடியாத நிலையிலும், கல்வித்தரத்தை மேம்படுத்த முடியாத நிலையிலும் தான் தமிழக கல்வித்துறையின் செயல்பாடுகள் உள்ளன. இதை சீரமைக்காமல் மற்றவர்களிடமிருந்து நிதியுதவி பெறுவது வீண். எனவே, தமிழகத்தில் அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்துவது குறித்து பரிந்துரைக்க கல்வியாளர்கள் குழுவை அமைக்க வேண்டும். அதன் பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகு, முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து நிதி உதவிகளைப் பெற்று அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக செலவிடுவது தான் பயனுள்ளதாக இருக்கும்." என குறிப்பிட்டுள்ளார்.