பத்திரிகை பதிவு மண்டல அலுவலகங்களை திறக்க வேண்டும் -இராமதாசு!
மூடப்பட்ட பத்திரிகை பதிவு மண்டல அலுவலகங்களை திறக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
மூடப்பட்ட பத்திரிகை பதிவு மண்டல அலுவலகங்களை திறக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., இந்தியாவில் செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்களை பதிவு செய்யவும், ஒழுங்குபடுத்தவும் 1867ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட அச்சகங்கள் மற்றும் நூல்கள் பதிவு சட்டத்திற்கு மாற்றாக, அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு சட்டத்தை இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள வரைவு சட்ட மசோதாவில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் உள்ளன.
எனினும், அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு சட்டம் எதற்காக இயற்றப்படுவதாக மசோதாவில் கூறப்பட்டிருக்கிறதோ, அதை உறுதி செய்வதற்கான அம்சங்கள் அதில் இடம்பெறவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது. செய்தித்தாள்கள் உள்ளிட்ட பருவ இதழ்களின் பதிவு மற்றும் பெயர் வழங்கும் நடைமுறை பத்திரிகை தலைமைப் பதிவாளர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படுவதற்கு இந்த மசோதா வழி வகுப்பதாக வரைவு மசோதாவில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பத்திரிகை தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் செயல்பாடுகளில் ஏற்கனவே செய்யப்பட்ட சில மாற்றங்கள் காரணமாக, புதிய சட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதில் ஏராளமான முட்டுக்கட்டைகள் உள்ளன என்பதே உண்மை.
புதிய செய்தித்தாள்கள் அல்லது பருவ இதழ்களைத் தொடங்குவதற்கு முன்பாக அதை பத்திரிகை தலைமைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து, விரும்பிய தலைப்பை பெற வேண்டும். இதற்காக சென்னை, மும்பை, கொல்கத்தா, போபால், கவுகாத்தி ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. அங்கு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் உள்ளூர் அளவில் சரிபார்க்கப்பட்டு, தில்லியில் உள்ள பத்திரிகை தலைமைப் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மண்டல அலுவலகங்கள் அளிக்கும் பரிந்துரைப்படி தலைமை அலுவலகம் செய்தித்தாள் மற்றும் பருவ இதழ்களுக்கு பெயர் வழங்கி பதிவு செய்வதுடன் பதிவு எண்ணும் வழங்கும். இந்த நடைமுறை எளிமையாக இருந்தது.
ஆனால், பத்திரிகை தலைமைப் பதிவாளர் அலுவலகத்தை சீரமைக்கும் நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் செயல்பட்டு வந்த மண்டல அலுவலகங்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் மூடப்பட்டன. சென்னை உள்ளிட்ட மாநிலத் தலைநகரங்களில் செயல்படும் பத்திரிகை தகவல் அலுவலகங்களில் பணியாற்றும் கூடுதல் தலைமை இயக்குனர், இயக்குனர், துணை இயக்குனர் ஆகியோர் முறையே கூடுதல் பதிவாளர், துணை பதிவாளர் மற்றும் உதவி பதிவாளர்களாக அறிவிக்கப்பட்டனர். எனினும், ஆன்லைனில் தான் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
எனினும், செய்தித்தாள் மற்றும் பத்திரிகைகளை பதிவுக்கான நடைமுறைகள், அடிக்கடி எழும் ஐயங்களை களைவதற்கான விளக்கங்கள் அனைத்தும் பத்திரிகை தலைமைப் பதிவாளர் அலுவலக இணையதளத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இடம் பெற்றிருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த விவரங்கள் சென்னையில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படுகின்றன. மற்ற மாநிலங்களில் இந்த பணி செய்யப்படவில்லை. இதனால் ஆங்கிலம், இந்தி தவிர்த்த பிற மொழிகளை அறியாதவர்களால் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய முடியவில்லை. புதிய இதழ்கள் தொடங்குவது கடந்த சில ஆண்டுகளில் குறைந்திருப்பதில் இருந்தே இதை உணரலாம்.
அதுமட்டுமின்றி, விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு சட்டத்தின்படி புதிய பத்திரிகைகளுக்கு தலைப்பு வழங்குவது, பதிவு செய்வது ஆகியவை தனித்தனியாக மேற்கொள்ளப்படும் என்பதால் அனைத்து பணிகளும் நிறைவடைய 8 மாதங்கள் முதல் ஓராண்டு வரை ஆகும். பல பத்திரிகைகளுக்கு விண்ணப்பித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்று வரை பதிவு கிடைக்கவில்லை. அதேபோல், பதிவை திருத்துதல், ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்களின் பெயர் மாற்றம் ஆகியவற்றுக்கு தேவையற்ற கால தாமதம் ஏற்படுகிறது. புதிய பதிவுகள் மற்றும் பதிவுச் சான்றிதழில் செய்யப்படும் திருத்தம் ஆகியவற்றுக்காக விண்ணப்பிக்கும் போது, அதற்கான இணைக்கப் படும் ஆவணங்கள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் இருக்க வேண்டும் என்று பத்திரிகை தலைமை பதிவாளர் அலுவலகம் வலியுறுத்துகிறது. பிற மொழியில் அனுப்பப்படும் ஆவணங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. அவற்றை மொழிபெயர்த்து அனுப்ப வேண்டியிருப்பதால் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது.
தாமதமும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் பதிவுச் சான்றிதழ் பெறுவதுடன் மட்டும் நின்று விடுவதில்லை. பதிவு எண் மற்றும் பதிவுச் சான்றிதழ் இல்லாமல் சலுகைக் கட்டணத்தில் அஞ்சலில் அனுப்பமுடியாது என்பதால் இந்த தாமதத்தால் சிறு குறு பத்திரிகைகளின் வெளியீட்டாளர்கள் கடுமையாக பாதிக்கப் படுகின்றனர். பத்திரிகை பதிவை எளிமையாக்கும் நோக்குடன் புதிய சட்டம் கொண்டு வரப்படும்போது, அதில் இந்த குறைகளை களைவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பத்திரிகை தகவல் அலுவலகங்களின் தலைமை அதிகாரிகளாக தலைமை இயக்குனர் நிலை அதிகாரிகள் தான் பதவி வகிக்கின்றனர். பத்திரிகை தலைமை பதிவாளரும் இதே நிலை அதிகாரி தான். எனவே, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் மூடப்பட்ட பத்திரிகை பதிவு மண்டல அலுவலகங்களை மீண்டும் திறந்து, அவற்றில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு பத்திரிகை தகவல் அலுவலக தலைமை அதிகாரிகள் மூலம் பதிவுச் சான்றிதழ் வழங்க அரசு முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.