முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டு விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மேல்முறையீடு செய்ய தீர்மானித்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ளா அறிக்கையில் கூறியதாவது, 


முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டிருப்பதை உறுதி செய்து, புதிய தேர்வுப் பட்டியலை 2 வாரங்களுக்குள் தயாரித்து வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் இதுவரை செயல்படுத்தவில்லை. மேலும், இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாரியம் தீர்மானித்திருப்பது கண்டிக்கத்தக்கது.


அரசு பள்ளிகளுக்கு 2144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளுக்கான முடிவுகள் நவம்பர் 20-ஆம் தேதியும், ஜனவரி 2-ஆம் தேதியும் இரு கட்டங்களாக வெளியிடப்பட்டன. முதல்கட்டமாக வெளியிடப்பட்ட முடிவுகளில் வேதியியல் பாட ஆசிரியர்கள் தேர்வில் இடஒதுக்கீட்டு முறை சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்றும், அப்பட்டியலை ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளுக்கு உட்பட்டு புதிய பட்டியலை தயாரித்து வெளியிடும்படியும் 24.11.2019 அன்று பா.ம.க. வலியுறுத்தியிருந்தது. அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட முடிவுகளில் தமிழ், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கான தேர்வு முடிவுகளிலும் அதே போன்று இட ஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டிருந்ததை ஜனவரி 5-ஆம் தேதி பாமக அம்பலப்படுத்தியது.


இதனிடையே வேதியியல் பாட ஆசிரியர் தேர்வில், பொதுப்பிரிவில் வெற்றி பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை பொதுப்பிரிவில் சேர்க்காமல், இடஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்கில் கடந்த 9-ஆம் தேதி தீர்ப்பளித்த நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன், ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகளையே தேர்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை என்று கருத்து தெரிவித்தது மட்டுமின்றி, வேதியியல் பாட ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளை முழுமையாக கடைபிடித்து புதிய தேர்வு பட்டியலை அடுத்த இரு வாரங்களுக்குள் தயாரித்து வெளியிட வேண்டும் என்று ஆணையிட்டார்.


சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட இரு வார அவகாசம் கடந்த 23-ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இன்றுடன் மூன்றாவது வாரமும் நிறைவடைந்து விட்டது. ஆனாலும், ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய பட்டியலை தயாரித்து வெளியிடவில்லை. உண்மையில் நீதிமன்றம் ஆணையிட்ட வேதியியல் பாடத்தில் மட்டுமின்றி, தமிழ், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டிய பாடங்களின் ஆசிரியர்கள் நியமனத்திலும் இக்குளறுபடி நடந்திருக்கிறது. அதனால், ஆசிரியர் தேர்வு வாரியம் தாமாக முன்வந்து குளறுபடி நடந்த அனைத்துப் பாடங்களுக்குமான புதிய பட்டியலை தயாரித்து வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், எந்த பாடத்திற்குமே புதிய பட்டியலை தயாரிக்காத ஆணையம், உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரியவந்துள்ளது.


ஆசிரியர்கள் தேர்வில் நடந்துள்ள சமூக அநீதியை உயர்நீதிமன்றத் தீர்ப்பு சரி செய்துள்ளது. அதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவது தான் நியாயமான செயலாகும். ஆனால், அதற்கு மாறாக, சமூக நீதி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என எந்த அடிப்படையில் வாரியம் முடிவு செய்தது என்று தெரியவில்லை. தமிழக அரசின் முதன்மை அடையாளங்களில் ஒன்று சமூகநீதி ஆகும். அவ்வாறு இருக்கும் போது முதலமைச்சர், கல்வித்துறை அமைச்சர், சட்ட அமைச்சர், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆகியோருடன் ஆசிரியர் தேர்வு வாரியம் கலந்து ஆலோசித்ததா? அல்லது தன்னிச்சையாக இந்த முடிவுக்கு வந்ததா? என்பது பற்றி ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் விளக்கமளிக்க வேண்டும்.


ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகவோ, எவரேனும் ஊழல் செய்ததாகவோ எவரும் குற்றஞ்சாட்டவில்லை. உயர்நீதிமன்றமும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது கடுமையான கண்டனம் எதையும் தெரிவிக்கவில்லை. மாறாக, பின்னடைவுப் பணியிடங்களையும், நடப்புக் காலியிடங்களையும் ஒன்றாக நிரப்பும் போது முதலில் நடப்புக் காலியிடங்களுக்கான பொதுப்பிரிவு இடங்கள் நிரப்பப்பட வேண்டும்; பின்னர் ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் முதலில் பின்னடைவுப் பணியிடங்களையும், தொடர்ந்து நடப்புக் காலியிடங்களில் சம்பந்தப்பட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடங்களையும் நிரப்ப வேண்டும் என்ற விதியை தேர்வு வாரியம் பின்பற்றவில்லை; அந்தக் குறையை சரி செய்ய வேண்டும் என்று தான் உயர்நீதிமன்ற நீதியரசர் அவரது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். அதை எதிர்த்து வாரியம் மேல்முறையீடு செய்கிறது என்றால், அது சமூகநீதிக்கு எதிராக உள்ளது என்று தான் அர்த்தம்.


முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதல் கட்ட தேர்வுப் பட்டியல் வெளியான சில நாட்களிலேயே இட ஒதுக்கீட்டு விதி மீறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி வாரியத் தலைவருக்கு பாமக கடிதம் எழுதியது. பா.ம.க. வழக்கறிஞர்கள் குழுவும் அவரை நேரில் சந்தித்து எடுத்துக் கூறியது. அதன்பின் இப்போது உயர்நீதிமன்றமே ஆணையிட்டும், அதை செயல்படுத்த தேர்வு வாரியம் மறுப்பதால் அதன் நோக்கத்தை சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. வாரியத்தின் இந்த நிலைப்பாடு தமிழகத்தில் சமூகநீதியை காப்பதில் ஈடு செய்ய முடியாத சீரழிவை ஏற்படுத்தி விடும். எனவே, இந்த விஷயத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் அதன் பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் வேதியியல் மற்றும் பிற பாடங்களுக்கு புதிய ஆசிரியர் தேர்வு பட்டியலை தயாரித்து வெளியிட வேண்டும்.


இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.