புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் பணிகள் வேண்டும் -PMK!
புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவது., புவி வெப்பமயமாதல் விகிதம் எதிர்பார்த்ததை விட வேகமாக அதிகரித்துக் கொண்டு செல்வதாக ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்திருக்கிறது. காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகளை கட்டுப்படுத்த இன்னும் கூடுதலான வேகத்தில் உலக நாடுகள் செயல்பட வேண்டும் என்று ஐ.நா. எச்சரித்திருக்கும் நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருப்பது கவலையளிக்கிறது.
காலநிலை மாற்றம் தொடர்பாக Emissions Gap Report 2019 என்ற தலைப்பில் ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், புவிவெப்பமயமாதலைக் கட்டுபடுத்த 2015&ஆம் ஆண்டின் பாரிஸ் காலநிலை உடன்பாட்டின்படி அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அனைத்து நாடுகளும் செயல்படுத்தினால் கூட, எதிர்காலத்தில் பூமியின் சராசரி வெப்பநிலை 3.2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 150 ஆண்டுகளில் புவிவெப்பநிலை சராசரியாக 1.1% அதிகரித்துள்ளது. அதன்காரணமாக இப்போது நாம் எதிர்கொண்டு வரும் காலநிலை மாற்றங்களையும், அவற்றின் தீய விளைவுகளையும் நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இத்தகைய சூழலில் இதைவிட 3 மடங்கு அளவுக்கு புவிவெப்பமயமாதல் அதிகரித்தால் ஏற்படும் தீய விளைவுகளை நினைக்கவே நடுங்குகிறது.
உலகின் சராசரி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டும் தான் புவிவெப்பமயமாதலின் தீயவிளைவுகளை சமாளிக்க முடியும். இதற்கான நடவடிக்கைகளை 2030&ஆம் ஆண்டுக்குள் செய்து முடிக்க வேண்டும். அதற்கு இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதால் புவிவெப்பமயமாதல் தடுப்பு நடவடிக்கைகளை பொறுமையாக செய்யலாம் என்ற அலட்சியம் பல்வேறு நாடுகளிடையே நிலைவும் சூழலில், அந்த அலட்சியத்தை போக்கும் நோக்கத்துடன் தான் இத்தகைய எச்சரிக்கையை ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதை உலக நாடுகள் உணர வேண்டும்.
காலநிலை மாற்றத்தின் வேகம் அதிகரிப்பதற்கு புவியிலிருந்து மாசுக்காற்று அதிக அளவில் வெளியேற்றப் படுவது தான் காரணமாகும். இதைக் கட்டுப்படுத்தினால் தான் புவிவெப்பமயமாதலையும் கட்டுப்படுத்த முடியும். ஆனால், மாசுக்காற்று வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வேகம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. 2018-ஆம் ஆண்டில் உலக அளவில் வரலாறு காணாத அளவாக 55 ஜிகா டன் மாசுக்காற்று வெளியானது. தற்போதைய நிலை நீடித்தால் இது 2030 ஆம் ஆண்டில் 60 ஜிகா டன்னாக அதிகரிக்கும். இதை 2030-ஆம் ஆண்டில் 25 ஜிகா டன்னாக குறைத்தால் தான் புவியின் சராசரி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த முடியும். ஆனால், பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் உலக நாடுகள் அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டால் கூட, 2030-ஆம் ஆண்டில் வெளியாகும் மாசுக்காற்றின் அளவு 56 ஜிகா டன்னாக இருக்கும். இதற்கும், இலக்குக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வித்தியாசத்துக்கு இணையானது என்பதால் தான் மாசுக்காற்றின் அளவை அதிரடியாக குறைக்க வேண்டும் என்று ஐ.நா. அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
மாசுக்காற்று வெளியேற்றத்தின் அளவை குறைப்பதற்கான நடவடிக்கைகளை பத்தாண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருந்தால், ஆண்டுக்கு 3.3% அளவு மாசுக்காற்றை குறைத்தால் போதுமானதாக இருக்கும். ஆனால், பத்தாண்டுகளாக உலக நாடுகள் எதையும் செய்யாத நிலையில், இப்போது மாசுக்காற்று வெளியேற்றப்படும் அளவு ஆண்டுக்கு 1.6% ஆக அதிகரித்துள்ளது.2020 முதல் 2030 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 7.6% அளவுக்கு மாசுக்காற்றை குறைக்காவிட்டால், அதன்பின்னர் உலகில் பேரழிவு ஏற்படுவதை தடுக்க முடியாது என்று ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரிக்கிறது.
காலநிலை மாற்றத்திற்கு வளர்ந்த நாடுகள் தான் காரணம், இதில் நமக்கு பங்கில்லை என்று கூறி இந்தியா ஒதுங்கியிருந்து விட முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் வெளியான மாசுக்காற்றில் 55% அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவை ஆகும். இந்தியா உள்ளிட்ட ஜி 20 நாடுகளில் இருந்து வெளியான மாசுக்காற்றின் அளவு 78%க்கும் கூடுதலாகும். அண்மைக்காலத்தில் அதிக மாசுக்காற்றை வெளியேற்றிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனும் போது, புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கான கடமையிலிருந்து இந்தியா விலகி விட முடியாது.
எனவே, புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்குடன் காலநிலை நெருக்கடி நிலையை இந்தியா பிரகடனப்படுத்த வேண்டும். அத்துடன் ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு வழிகாட்டியுள்ளவாறு நிலக்கரி அனல் மின்நிலையங்களை கைவிடுதல், தொழிற்சாலைகளை தூய தொழில்நுட்பங்களுக்கு மாற்றுதல், பொதுப்போக்குவரத்து வசதிகளை அதிகமாக்குதல், வாகனங்கள் மூலம் மாசு பரவுவதை ஒழித்தல் ஆகிய நான்கு நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மத்திய அரசு மேம்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.